செய்திகள் :

Doctor Vikatan: ஊதுவத்தியும் சாம்பிராணிப் புகையும் நுரையீரலை பாதிக்குமா?

post image

Doctor Vikatan: எங்கள் வீட்டில் காலையிலும் மாலையிலும் ஊதுவத்தி ஏற்றிவைப்பது வழக்கம். விசேஷ நாள்களில் சாம்பிராணிப் புகையும் போடுவோம். சமீபத்தில் வீட்டுக்கு வந்திருந்த உறவினர், அதைப் பார்த்துவிட்டு, ஊதுவத்தி ஏற்றுவதும் சாம்பிராணிப் புகை போடுவதும் மிகவும் ஆபத்தானவை. வீட்டில் யாரேனும் சுவாசப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு இவை பெரிய சிக்கலை ஏற்படுத்தலாம் என்றார். காலங்காலமாகச் செய்து வரும் இந்த விஷயத்தின் பின்னால் உண்மையிலேயே ஆரோக்கியத்தை பாதிக்கும் தன்மை இருக்கிறதா, இதை விளக்க முடியுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி.

நுரையீரல் மருத்துவர் திருப்பதி

சூழல் மாசு குறித்துப் பேசும்போது, 'இண்டோர் ஏர் பொல்யூஷன்' (Indoor Air Pollution) எனப்படும் உட்புறச் சூழல் மாசு குறித்தும் பேச வேண்டும். அந்த மாசும், நம் ஆரோக்கியத்தை பாதிப்பதில் கணிசமான பங்கு வகிக்கிறது.

இண்டோர் ஏர் பொல்யூஷன் என்பது சாணம் போன்றவற்றைப் பயன்படுத்தி, அடுப்பெரிப்பதில் தொடங்கி பல விஷயங்கள் வாயிலாக பாதிக்கக்கூடியது. குறிப்பாக, இந்த வகை மாசானது, சிஓபிடி (Chronic Obstructive Pulmonary Disease ) எனப்படும் நாள்பட்ட நுரையீரல் அழற்சி பாதிப்பு கொண்டவர்களுக்கு நோய் பாதிப்பைத் தீவிரப்படுத்தக்கூடியது. இது மட்டுமன்றி, நீங்கள் குறிப்பிட்டுள்ள ஊதுவத்தி, சாம்பிராணி, கொசுவத்திச் சுருள் போன்றவையும் இதே பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவையே.

இவற்றைப் பயன்படுத்தும்போது புகை வருகிறது. இவற்றில் கெமிக்கல்தான் பயன்படுத்தியிருப்பார்கள்.  வாலடைல் ஆர்கானிக் காம்பவுண்ட்ஸ் (Volatile Organic Compounds ) எனப்படும்  ஆவியாகும் கரிமச் சேர்மங்கள் இருக்கும். அவை தவிர,  Particulate Matter 2.5 எனப்படும் நுண்ணிய துகள்களும் இருக்கும். அதாவது இவற்றின் சைஸ், 2.5 மைக்ரானுக்கும் கீழே இருக்கும்.

சாம்பிராணி புகை

வழக்கமாக இந்தத் துகள்களின் அளவானது பெரிதாக இருந்தால், தொண்டை வழியே போகும்போது அங்கேயே வடிகட்டப்படும்.  அதனால் பெரிய பாதிப்பிருக்காது. அதுவே இதுபோன்ற நுண்ணிய துகள்கள், வடிகட்டப்படாமல், நுரையீரலில் போய் படியும். நுரையீரல் நேரடியாக பாதிக்கப்படுவதால் நோய்களின் தீவிரம் அதிகரிக்கும். ஊதுவத்தி, சாம்பிராணி போன்றவற்றில் இதுதான் பிரச்னையே. சிறிய அறையிலோ அல்லது மூடப்பட்ட அறையிலோ ஊதுவத்தியோ, சாம்பிராணியோ ஏற்றிவைக்கும்போது தீவிரம் மிக அதிகம்.

தினமும் 10 வத்தி கொளுத்தி வைப்பவர்கள், எப்போதும் சாம்பிராணிப் புகையோடு வைத்திருப்பவர்களை எல்லாம் என் அனுபவத்தில் பார்க்கிறேன். அந்த வாசம் பிடித்ததாலோ அல்லது ஆன்மிகத்துடன் தொடர்புபடுத்திப் பார்ப்பதாலோ அப்படிச் செய்வார்கள். எதுவுமே அளவோடு இருந்தால் பிரச்னையில்லை. அளவு தாண்டும்போது ஆஸ்துமா, வீஸிங் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். நுரையீரலின் இயக்கம் பாதிக்கப்படும். நிமோனியா பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக, ஏற்கெனவே நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களுக்கு அவற்றின் தீவிரம் அதிகரிக்க இவை காரணமாகும். நுரையீரல் புற்றுநோய் வரை ஏற்படும் அளவுக்கு இவற்றின் ஆபத்து குறித்து ஆய்வுகள் சொல்கின்றன. 

நுரையீரல் புற்றுநோய் ( Lung cancer)

எனவே, என்றோ ஒருநாள் வீட்டில் விசேஷம் என்றால் ஊதுவத்தி, சாம்பிராணி பயன்படுத்துவதில் தவறில்லை. தினசரி பழக்கமாக மாற்றும்போதுதான் பிரச்னையே.  என்றாவது உபயோகப்படுத்தும்போதும், இவற்றைக் கொளுத்தியதும் ஜன்னல் கதவுகளைத் திறந்து வைக்க வேண்டும்.  வீட்டில் எப்போதும் வாசனை வேண்டும் என்போர்,  டிஃப்யூசரில் எசென்ஷியல் ஆயில் பயன்படுத்தலாம்.  எசென்ஷியல் ஆயில் என்பது இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெய்கள் என்பதால் இந்த அளவுக்குப் பிரச்னை இருக்காது. ஆனாலும், அவை எந்த அளவுக்கு இயற்கையானவை என்பது கேள்விக்குரியது என்பதால் அவற்றையும் அளவோடு பயன்படுத்துவதுதான் சரி.

காரில் பயணம் செய்யும்போதுகூட பலரும் கார் கண்ணாடியைத் திறக்கவே மாட்டார்கள். அதுவும் தவறு.  லாங் டிரைவ் செல்லும்போது கண்ணாடிக் கதவுகளை இறக்கிவிட்டுச் செல்லலாம். தினமும் காலையில் காரை கிளப்பும் முன், சிறிது நேரம் கண்ணாடிக் கதவுகளை இறக்கிவிட்டு, காற்றோட்டம் உள்ளே பரவவிட்ட பிறகு எடுத்துச் செல்வதுதான் சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Cervical Spondylosis: யாருக்கெல்லாம் வரலாம்; அறிகுறிகளும் தீர்வுகளும்!

கழுத்தின் மூட்டுப் பகுதி மற்றும் பின்முதுகுவரை பாதிக்கும் `செர்விகல் ஸ்பாண்டிலோசிஸ் பிரச்னை, வயது வித்தியாசமின்றி யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இது குறித்து, எலும்பு மூட்டு மருத்துவர் நாவலடி சங்க... மேலும் பார்க்க

Soda: செரிமானத்துக்கு உதவுமா; வயிறு உப்புசத்தை சரியாக்குமா சோடா?

பல வீடுகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவம் வாங்கிய கையோடு, காற்றடைத்த குளிர்பானங்களையும் வாங்கி வந்து ஃபிரிட்ஜில் வைப்பார்கள். மதியம் வயிறு புடைக்க சாப்பிட்டு முடித்தவுடன், குழந்தைகளில் ஆரம்பித்து பெரிய... மேலும் பார்க்க

Doctor Vikatan: எண்ணெய் தேய்த்துக் குளிப்பது முடி உதிர்வைக் கட்டுப்படுத்துமா, எந்த எண்ணெய் உகந்தது?

Doctor Vikatan: இந்தத் தலைமுறை பிள்ளைகள் பலரும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை விரும்புவதே இல்லை. எண்ணெய்க் குளியல் உண்மையிலேயே அவசியம்தானா, என் 17 வயது மகளுக்கு முடி உதிர்வு அதிகமாக இருக்கிறது. எண்ணெய்... மேலும் பார்க்க

Doctor Vikatan: லேசான காய்ச்சல்; பாராசிட்டமால் மாத்திரை போதுமா, மருத்துவரைப் பார்க்க வேண்டுமா?

Doctor Vikatan: என்னுடைய மாமனாருக்கு 65 வயதாகிறது. அவருக்கு லேசான காய்ச்சல் அடித்தாலேஉடனே பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. மருத்துவரைப் பார்க்கலாம் என்று சொன்னால் கேட்க மாட... மேலும் பார்க்க

Doctor Vikatan: சில வகை மருந்துகளை சாப்பிட்டதும் வயிற்று எரிச்சல் ஏற்படுவதுஏன்?

Doctor Vikatan:சில வகை மருந்துகளை சாப்பிட்டதும் வயிறு எரிவது போன்று உணர்வது ஏன், சாப்பாட்டுக்கு முன் சாப்பிட வேண்டிய மாத்திரைகளை சாப்பிட்ட பிறகோ, சாப்பிட்ட பிறகு சாப்பிட வேண்டியதை சாப்பாட்டுக்கு முன்ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: கண் களிக்கம் எனும் சித்த மருந்து; கண் நோய்கள் அனைத்துக்கும் தீர்வாகுமா?

Doctor Vikatan: கண் களிக்கம் என்ற பெயரில் புழக்கத்தில் இருக்கும் சித்த மருந்து, கண் சம்பந்தப்பட்ட பல நோய்களுக்குத் தீர்வு தரும் என்று சொல்கிறார்களே, அது எந்த அளவுக்கு உண்மை?-மனோபாலா, விகடன் இணையத்திலி... மேலும் பார்க்க