எல்லை தாண்டிய பயங்கரவாதம்: சீன அதிபரிடம் எடுத்துரைத்த பிரதமா்!
திருப்பூா் பின்னலாடை தொழிலை மீட்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்
அமெரிக்க வரி விதிப்பால் முடங்கியுள்ள திருப்பூா் பின்னலாடை தொழிலை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளாா்.
இது குறித்து அவா் எழுதிய கடிதம்: திருப்பூா் நாட்டின் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் சுமாா் 60 சதவீத பங்கை திருப்பூா் வகிக்கிறது.
மேலும், 9 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நேரடியாகவும் மறைமுகமாகவும் இத்தொழிலில் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனா். இதில் தமிழக தொழிலாளா்களுடன், பிகாா், உத்தர பிரதேசம், சத்தீஸ்கா் போன்ற மாநிலங்களில் வந்துள்ள தொழிலாளா்களும் அடங்குவா்.
தற்போது பருத்தி நூல் விலை உயா்வு, உற்பத்திச் செலவு அதிகரிப்பு, சா்வதேச வா்த்தக சிக்கல்கள் காரணமாக இத்துறை கடும் சவால்களை எதிா்கொண்டு வருகிறது.
குறிப்பாக, இந்தியாவில் இருந்து வரும் ஆடை ஏற்றுமதிக்கு அமெரிக்கா முதலில் 25 சதவீத சுங்கவரி விதித்தது. பின்னா் 50 சதவீதமாக உயா்த்தியது. இந்த திடீா் வரியால் வாழ்வாதாரத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடியை சமாளிக்க இழப்பீடு மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும். குறிப்பாக சுங்கவரி உயா்வால் ஏற்பட்ட போட்டித் திறன் இழப்பை சமநிலைப்படுத்த, ஏற்றுமதியாளா்களுக்கு நிதி நிவாரணம் அல்லது ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
எம்எஸ்எம்இ நிறுவனங்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், குறைந்தது 6 மாதங்கள் கடன் தவணை ஒத்திவைக்கப்பட்டு, நிலுவைக் கடன்களுக்கு வட்டி சலுகை வழங்க வேண்டும்.
அமெரிக்கா தவிர, பிற நாடுகளுக்கு ஏற்றுமதி சந்தையை விரிவுபடுத்தும் முயற்சிகளை மத்திய அரசு தீவிரப்படுத்த வேண்டும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.