Doctor Vikatan: பயணத்தின்போது கழிவறைக்கு ஓட வேண்டிய அவசரம்.. பிரச்னையைத் தவிர்க்க வழி உண்டா?
Doctor Vikatan: எனக்கு எங்கே பயணம் செய்தாலும் வெறும் வயிற்றுடன்தான் செல்ல வேண்டும். கொஞ்சமாக ஏதேனும் சாப்பிட்டாலும் பாதி பயணத்தில் கழிவறைக்கு ஓடும்படியான அவசரநிலை ஏற்படும். இதனால் கழிவறை வசதியில்லாத பயணங்களின் போது பசியோடுதான் செல்ல வேண்டியிருக்கிறது. இந்தப் பிரச்னையை எப்படிப் புரிந்துகொள்வது? இதற்கு என்ன காரணம்,எப்படித் தவிர்ப்பது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இரைப்பை மற்றும் குடல் மருத்துவர் பாசுமணி

ஐபிஎஸ் எனப்படும் 'இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்' (Irritable bowel syndrome ) பிரச்னையின் அறிகுறிதான் இது. இந்தப் பிரச்னையில், குடலானது பரபரப்பாக, தேவைக்கதிகமாக இயங்கும். வயிற்றுவலியும், உப்புசமும் அதிகமாக இருக்கும். சிலருக்கு வயிற்றுப்போக்காகவும் சிலருக்கு மலச்சிக்கலாகவும் இது வெளிப்படலாம். சிலருக்கு இரண்டும் மாறி மாறி வரும்.
பயணம் என்றாலே அலர்ஜியை ஏற்படுத்தும் அளவுக்கு இது பலருக்கும் பெரிய பிரச்னையாகவே இருக்கிறது. பல கிலோ மீட்டர் பயணம் என்றில்லாமல், அரைமணி நேர பயணத்தில்கூட இந்தப் பிரச்னை ஏற்பட்டு அவதிக்குள்ளாகிறவர்கள் இருக்கிறார்கள்.
சிலருக்கு என்ன சாப்பிட்டாலும் உடனே பாத்ரூம் வரும். சிலருக்கு அசைவம் சாப்பிட்டால் வரும்... சிலருக்கு எண்ணெய் உணவுகள் சாப்பிட்டால் வரும். 3-4 கிலோ மீட்டர் பயணம் செய்வதற்குள் அவசரமாக மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் சிலருக்கு வரும். இது சுனாமி மாதிரி வரும். கட்டுப்பாடின்றி மலம் கழிந்து உடையை நனைத்து அசிங்கமாகி விடுமோ என்ற பயம் பலருக்கும் இருக்கும். மழைவரும்போது குடை பிடிக்கிற மாதிரி பயணம் செய்கிற போது அதற்கு முன் சாப்பிடக்கூடிய மாத்திரை இருக்கிறது.

சிலருக்கு மேடை ஏறினாலே பதற்றமாகும். அந்த உணர்வைக் கட்டுப்படுத்த ஒரு மாத்திரை இருக்கிறது. அதை எடுத்துக்கொண்டு மேடை ஏறினால் நிதானமாகப் பேசிவிட்டு வருவார்கள். மருந்தியல் புத்தகத்திலேயே 'மேடை பயம் உள்ளோர் இதை எடுத்துக்கொள்ளலாம்' என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படித்தான் பயணத்தின்போது பாத்ரூம் வரும் அவஸ்தைக்கு, அந்த நேரத்தில் தற்காலிகமாக குடலின் அழுத்தத்தைக் குறைக்க பிரத்யேக மாத்திரை எடுத்துக்கொண்டு கிளம்பினால் பிரச்னை இல்லாமல் சமாளிக்கலாம். உங்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட என்ன காரணம் என்பதைத் தெரிந்து, சரியான சிகிச்சையைப் பெற முறையான மருத்துவரை அணுகுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.