Doctor Vikatan: இந்தியனா, வெஸ்டர்னா... எந்த toilet யாருக்கு ஏற்றது, ஏன்?
Doctor Vikatan: பயிற்சி மருத்துவர்கள் மருந்துச்சீட்டு எழுதலாமா?
Doctor Vikatan: பயிற்சி மருத்துவர்கள் மருந்துச்சீட்டு எழுதலாமா... அவர்கள் மட்டுமே தரும் மருத்துவ ஆலோசனைகள் போதுமானவையா... சீனியர் மருத்துவர் பார்க்க வேண்டாமா?
பதில் சொல்கிறார், நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவர் சஃபி
பயிற்சி மருத்துவர்களை 'சிஆர்ஆர்ஐ' (Compulsory Residential Rotatory Internship) என்று சொல்வோம். இவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்பை முழுமையாக முடித்துவிட்டு பயிற்சி எடுக்கக்கூடிய மருத்துவர்கள்.
சிஆர்ஆர்ஐ என்று அழைக்கப்படும் இந்தப் பயிற்சி மருத்துவர்களுக்கு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அல்லது மருத்துவக்கல்லூரி சார்ந்த சுகாதார மையங்களில் போஸ்ட்டிங் வழங்கப்படும். அப்படி போஸ்ட்டிங் பெற்ற நிலையில், அவர்கள் அங்கு வரும் நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்துச்சீட்டு போதுமானதுதான்.
பயிற்சி மருத்துவர்கள் அந்த இடத்தில் அவர்களுடன் இருக்கும் சுகாதார அலுவலரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலோடுதான் மருந்துச்சீட்டைத் தருவார்கள். இந்த விதியானது, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி சார்ந்த அரசு பொது மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் போன்ற இடங்களுக்குப் போதுமானது.
அதுவே, பயிற்சி மருத்துவர்கள் என்று சொல்லிக்கொண்டு, தனியார் மருத்துவமனைகளில் மருந்துச்சீட்டு கொடுக்கக்கூடாது. அவர்கள் அப்படிக் கொடுப்பது, மருத்துவர்களின் ஆலோசனை அல்லது வழிகாட்டுதல் இல்லாமல் தன்னிச்சையாகக் கொடுக்கும் மருந்துச்சீட்டாக இருக்கும். அது தவறு. ஏனென்றால் அவர்கள் முறையாக மருத்துவப் பயிற்சியை முடித்து, அதற்கான அங்கீகாரத்தைப் பெற்ற பிறகுதான் அவர்கள் தன்னிச்சையாக மருத்துவம் பார்க்க முடியும். இந்த வித்தியாசத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் அங்கேயே மருந்துகள் விநியோகிக்கப்படும் என்பதால் பிரச்னைகள் வர வாய்ப்பில்லை. ஏனெனில், அங்குள்ள மருத்துவர்கள் பொதுவாக மருந்துகளை வெளியே வாங்கும்படி பரிந்துரைக்க மாட்டார்கள். அரசு மருத்துவமனையின் உள்ளேயே கிடைக்கும் மருந்துகளையே பரிந்துரைப்பார்கள். தனியார் மருத்துவமனைகளில் பயிற்சி மருத்துவர்களாக இருப்பவர்கள் அப்படிச் செய்ய மாட்டார்கள். இந்த வேறுபாட்டையும் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.