ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரா் உடலை வாங்க மறுத்து போராட்டம்
Doctor Vikatan: ஹுசைனியை பாதித்த `ஏபிளாஸ்டிக் அனீமியா': ரத்தப் புற்றுநோயாக மாறியது எப்படி?
Doctor Vikatan: பிரபல கராத்தே வீரர் ஹுசைனிக்கு ஏபிளாஸ்டிக் அனீமியா என்ற பிரச்னை பாதித்திருத்திருப்பதாகவும், அது பிளட் கேன்சர் எனப்படுகிற ரத்தப் புற்றுநோயாக மாறியதால், அவர் வாழ்நாள்களை எண்ணிக்கொண்டிருப்பதாகவும் பேட்டிகள் கொடுக்கிறார். அதென்ன ஏபிளாஸ்டிக் அனீமியா... அது எப்படி புற்றுநோயாக மாறும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் கார்த்திகேயன்.

ஒரு நபருக்கு ரத்தச் சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் மற்றும் தட்டணுக்கள் மூன்றும் குறைவாகக் காணப்படுகிற ஒரு நிலையே 'ஏபிளாஸ்டிக் அனீமியா' (Aplastic anemia) எனப்படுகிறது. அரிதாக சிலருக்கே அது புற்றுநோயாக மாறும்.
போன் மேரோ (bone marrow) எனப்படுகிற எலும்பு மஜ்ஜையிலிருந்துதான் ரத்த அணுக்கள் உருவாகின்றன. மேற்குறிப்பிட்ட மூன்று அணுக்களும் எலும்பு மஜ்ஜையிலிருந்து உருவாகிறவைதான். எலும்பு மஜ்ஜையில் ஏதேனும் சிதைவு ஏற்பட்டால் அதன் காரணமாக ஏபிளாஸ்டிக் அனீமியா வரலாம். அது சில மருந்துகள் அல்லது ரசாயனங்களால், வைரஸ் தொற்றால் அல்லது சம்பந்தப்பட்ட நபரின் நலிந்த நோய் எதிர்ப்பாற்றல் காரணமாக இருக்கலாம். ஆனால், பெரும்பாலான தருணங்களில் இந்தப் பிரச்னைக்கான காரணம் இதுதான் என்று தெரியாது. அதை நாம் 'இடியோபதிக்' என்று சொல்வோம்.

ஏபிளாஸ்டிக் அனீமியாவில் அதீத களைப்பு இருக்கும். பலவீனமாக உணர்வார்கள். இதயத்துடிப்பு வேகமாக இருக்கும். தொற்றின் காரணமாக அப்படி இதயத்துடிப்பு வேகமாக இருக்கலாம். அடிக்கடி தொற்று பாதிப்புக்கு உள்ளாவார்கள். பிளேட்லெட்ஸ் எனப்படும் தட்டணுக்கள் குறைவதால் எளிதில் ரத்தப்போக்கு ஏற்படும். அடிபட்டால் ரத்தம் நிற்காமலிருக்கலாம். சிறுநீர், மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறலாம். கம்ப்ளீட் பிளட் கவுன்ட் எனப்படும் ரத்தப் பரிசோதனையில் இதைக் கண்டுபிடிக்கலாம். அதில் ஹீமோகுளோபின், தட்டணுக்கள், வெள்ளை அணுக்கள் மூன்றுமே குறைந்திருப்பதை வைத்து உறுதிசெய்யலாம். அதாவது அந்த வயதுக்கு இருக்க வேண்டியதைவிட குறைவாக இருக்கும்.
அடுத்ததாக, போன் மேரோ பயாப்சி (bone marrow biopsy) என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். அதில் ஸ்டெம் செல்கள் அசாதாரணமாக இருக்கின்றனவா என கண்டுபிடித்து அதைவைத்து ஏபிளாஸ்டிக் அனீமியாவை உறுதிசெய்வார்கள்.
காரணத்தைக் கண்டுபிடித்த பிறகு அதற்கேற்ற சிகிச்சை முடிவு செய்யப்படும். உதாரணத்துக்கு, மருந்துகளின் விளைவால் வந்திருந்தால் அந்த மருந்துகளை நிறுத்த வேண்டும். அடிக்கடி தொற்று ஏற்படுவதால் அதற்கேற்ற மருந்துகள் எடுக்க வேண்டியிருக்கும். ஹீமோகுளோபின் குறைவதால் ரத்தம் ஏற்ற வேண்டி வரலாம். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து ரத்தம் பெறுவதைத் தவிர்க்க வேண்டும். இம்யூனோ சப்ரசென்ட் மருந்துகள் தேவைப்படலாம்.

ஏபிளாஸ்டிக் அனீமியாவின் தீவிரத்தைப் பொறுத்தும் சிகிச்சை வேறுபடலாம். மிகத் தீவிரமானது, தீவிரமானது, மிதமானது என இதை மூன்று நிலைகளாகப் பிரிப்போம். முதல் இரண்டு நிலைகளுக்கு போன் மேரோ டிரான்ஸ்பிளான்ட்டேஷன் எனப்படும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை தேவைப்படலாம். 40 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பிரத்யேக ஸ்டெம் செல் டிரான்ஸ்பிளான்ட்டேஷன் சிகிச்சை தேவைப்படலாம். ஆரோக்கியம் குறைவானவர்களுக்கு சப்போர்ட்டிவ் சிகிச்சைதான் கொடுக்கப்படும். பொதுவாக இது புற்றுநோயாக மாறாது. அரிதாக சிலருக்கு இது ரத்தப் புற்றுநோயாக மாறவும் கூடும். மற்றபடி ரத்த செல்களின் குறைபாடு காரணமாக ஏற்படுகிற நோய் இது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.