Doctor Vikatan: ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருப்பதும் பிரச்னையா?
Doctor Vikatan: எனக்கு ஹீமோகுளோபின் அளவு 19 ஆக உள்ளது. இது வழக்கத்தைவிட அதிகம் என்பது புரிகிறது. இப்படி ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருப்பதற்கான காரணம் என்ன... இது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா... பாதிப்புகளை ஏற்படுத்துமா?
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி
![](https://gumlet.vikatan.com/vikatan/2021-12/036f967b-e2da-4b35-99a1-2c6639b4f11f/WhatsApp_Image_2021_05_19_at_12_22_16_PM.jpeg)
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அது சாதாரண பிரச்னை தொடங்கி, சீரியஸான பாதிப்பின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
ஹீமோகுளோபின் என்பது நம் ரத்தச் சிவப்பணுக்களில் இருக்கக்கூடிய ஒருவித புரதம். நம் ரத்தச் சிவப்பணுக்களுக்கு சிவப்பு நிறத்தைக் கொடுப்பது இதுதான். நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை உடல் முழுவதும் எடுத்துச்செல்வதும், கார்பன் டை ஆக்ஸைடை உடலின் மற்ற பகுதிகளில் இருந்து நுரையீரலுக்கு கொண்டு போவதும்தான் இதன் வேலை. உங்களுக்கு இருப்பது போன்று ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருப்பதை 'பாலிசைதீமியா' (Polycythemia) என்று சொல்கிறோம்.
ஆணுக்கு ஒரு டெசி லிட்டருக்கு 16.5 கிராமுக்கு மேல் ஹீமோகுளோபின் இருந்தாலோ, பெண்ணுக்கு அது 16 கிராமுக்கு மேல் இருந்தாலோ, குழந்தைக்கு 16.6 கிராமுக்கு மேல் இருந்தாலோ அந்த நிலையை 'பாலிசைதீமியா' என்று சொல்வோம். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைக்கு அது 18 கிராமுக்கு மேல் இருந்தால் அதை பாலிசைதீமியா என்போம்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-05/e4b6ea1e-38be-4f29-8dda-b665e907e149/p54a.jpg)
பாலிசைதீமியா பாதிப்புக்குப் பொதுவான காரணங்கள் சில உள்ளன. உதாரணத்துக்கு, தண்ணீர் குடிக்காமல் உடலில் நீர்வறட்சி ஏற்படுவது முக்கியமான காரணம். உயரமான பகுதிகளில் இருக்கும்போதும் ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருக்கலாம். ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருந்தால், தலைச்சுற்றல், எளிதில் அடிபடுதல், ரத்தப்போக்கு ஏற்படுவது, அதிகம் வியர்ப்பது, களைப்பாக உணர்வது, தலைவலி, மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவது, அசாதாரண வெயிட்லாஸ் போன்ற அறிகுறிகள் இருக்கலாம்.
ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருப்பதால் ரத்தம் சராசரியைவிட சற்று அடர்த்தியாக இருக்கும். அதனால் ரத்தக்கட்டிகள் உருவாகலாம். அதன் காரணமாக வரக்கூடிய பக்கவாதம் உள்ளிட்ட பிரச்னைகள் வரலாம். 'க்ரானிக் அப்ஸ்ட்ரக்டிவ் பல்மனரி டிசீஸ்' (Chronic obstructive pulmonary disease ) எனப்படும் 'நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்' போன்ற நுரையீரல் பாதிப்பு, பிறவியிலேயே ஏற்படக்கூடிய இதயநோய்கள், கிட்னி மற்றும் கல்லீரல் புற்றுநோய் போன்ற காரணங்களாலும் ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருக்கலாம். அரியவகை பாதிப்பான 'பாலிசைதீமியா வீரா' (Polycythemia vera ) எனப்படும் பாதிப்பிலும் இப்படி ஹீமோகுளோபின் அளவு அதிகமாகலாம். இந்தப் பிரச்னை மரபியல் காரணமாக ஏற்படுவது. இது ஒருவகை ரத்தப் புற்றுநோய்தான். சிறுவயதில் பெரும்பாலும் இதைக் கண்டுபிடிக்க முடியாது. 50 வயதுக்குப் பிறகுதான் கண்டுபிடிக்கப்படும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2023-12/726acd71-6392-4294-be2e-4032247e878d/Untitled_8.jpg)
சிலவகை ஸ்டீராய்டு மருந்துகள் எடுப்பவர்களுக்கும், கார்பன் மோனாக்ஸைடு தாக்கத்துக்கு உள்ளானவர்களுக்கும் ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருக்கலாம். எனவே, உங்கள் விஷயத்தில் எந்தக் காரணத்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகமாக இருக்கிறது என்பதை மருத்துவரை சந்தித்து, டெஸ்ட் செய்து பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ரத்தவியல் சிகிச்சை நிபுணரை சந்திப்பது சரியாக இருக்கும். அவரால் உங்கள் பிரச்னையைத் துல்லியமாகக் கண்டுபிடித்து சரியான சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.