Golden Temple: 54 வருடங்களுக்கு பிறகு அணைக்கப்பட்ட பொற்கோயிலின் விளக்குகள்: காரணம் கூறும் நிர்வாகி!
அமிர்தசரஸ் பொற்கோயில் (Sri Harmandir Sahib) பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் அமைந்துள்ள சீக்கியர்களின் மிக முக்கியமான புனிதத் தலமாகும். இக்கோயில், "பொற்கோயில்" எனப் பொதுவாக அழைக்கப்படுகிறது. இது 1577-ம் ஆண்டில் சீக்கிய நான்காவது குருவான குரு ராம் தாஸ் அவர்களால் நிறுவப்பட்டது.

தற்போது சிறப்பு உயர் தொழில்நுட்ப விளக்கு அமைப்புடன் கூடிய பொற்கோயிலில் நிரந்தர ஒளிரும் விளக்குகள் உலகளவில் போற்றப்படுகின்றன. இந்தக் கோயில் உருவாக்கப்பட்டத்திலிருந்து விதிவிலக்கான சூழ்நிலைகளைத் தவிர, ஒருபோதும் விளக்குகள் அணையாமல் பாதுகாக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு 10.30 முதல் 11.00 மணிவரை விளக்குகள் அணைக்கப்பட்டன.
இந்தியா பாகிஸ்தான் இடையே தொடரும் பதற்றமான சூழலை கருத்தில் கொண்டு, ஒவ்வோரு மாநில அரசுகளும் போர் ஒத்திகையை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், இந்தியாவின் பிரசித்திப்பெற்ற பொற்கோயிலில் 54 ஆண்டுகளுக்குப் பிறகு விளக்குகள் அணைக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் 'ரெஹத் மரியாதா' (சீக்கிய நடத்தை விதிகள்) கருத்தில் கொண்டு, கருவறை மற்றும் ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்பின் 'பர்காஷ்' விழா தொடங்கப்பட்ட இடங்கள் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் இந்த ஒத்திகையின் அடிப்படையில் மின்தடை அமல்படுத்தப்பட்டது.
இது தொடர்பாக பேசிய சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழுவின் (SGPC) செயலாளர் பிரதாப் சிங், ``1965, 1971 ஆகிய ஆண்டுகளில் இந்திய-பாகிஸ்தான் போர்களின் போது - பாதுகாப்பு நடவடிக்கைகளாக பொற்கோயில் வளாகத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டன. பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு இந்தப் பயிற்சியை ஒப்புக் கொள்ள வேண்டும். மர்யாதா -வைக் கவனித்து, ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்பின் ‘பர்காஷ்’ நடைபெற்ற இடங்களில் விளக்குகள் மங்கலான முறையில் எரிந்தது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.