டி20 போட்டிகளில் 2024-ஆம் ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்ற இந்திய வீரர்!
Greenland: 'கிரீன் லேண்ட் வேணும்' அடம்பிடிக்கும் ட்ரம்ப்... அமெரிக்காவால் வாங்க முடியுமா?!
'கிரீன் லேண்ட்' - நமது பள்ளிக்காலங்களை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தால், சமூக அறிவியல் பாடத்தில் வந்த உலக நாடுகளின் வரைபடத்தில் எந்த நாட்டுடனோ, எந்தக் கண்டத்துடனோ புவியியல் ரீதியாக ஒட்டும் இல்லாத உறவும் இல்லாத ஒரு தீவு நாடு.
இந்தத் தீவு நாட்டின் மீது அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள ட்ரம்புக்கு நீண்ட நாட்களாக கண்கள். 'எப்போதிருந்து...?' என்று கேட்டால், பதவியேற்கும் போதெல்லாம் இந்த ஆசை ட்ரம்பிற்கு எட்டி பார்த்துவிடும்.
2017 டு 2020 வரை அமெரிக்க அதிபராக இருந்தப்போது, கிரீன் லேண்டை அமெரிக்கா வாங்கி, தன்னோடு இணைத்துக்கொள்ள வேண்டும் என்று குரல் கொடுத்தார் ட்ரம்ப். இப்போது, வரும் 20-ம் தேதி அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அதற்கு முன்பே, 'அமெரிக்கா கிரீன் லேண்டை வாங்க வேண்டும்' என்று பேச ஆரம்பித்துவிட்டார்.
இந்த பரபரப்புகளுக்கு இடையே தான், ட்ரம்பின் மகன் தற்போது கிரீன் லேண்டிற்கு சின்ன விசிட் அடித்துள்ளார்.
கிரீன்லேண்ட்...
ட்ரம்ப் இவ்வளவு ஆர்வமாக இருக்கும் கிரீன் லேண்ட் பற்றி கொஞ்சம் பார்ப்போம்...
உலகின் மிகப்பெரிய தீவுகளில் ஒன்று கிரீன் லேண்ட். இது டென்மார்க்கை சேர்ந்த மற்றும் சேராத நாடு. குழப்பம் வேண்டாம் மக்களே... கிரீன் லேண்ட் டென்மார்க் கீழ் இருந்தும், தனி அரசு கொண்டு செயல்படும் ஒரு நாடு ஆகும்.
புவியியல் ரீதியாக, வட அமெரிக்கா அருகில் கிரீன் லேண்ட் அமைந்திருந்தாலும், அரசியல் ரீதியாக, இது ஐரோப்ப நாடான டென்மார்க்கின் கீழ் இயங்கும் நாடு. 1953-ம் ஆண்டு வரை, கிரீன் லேண்டை டென்மார்க் ஆட்சி செய்தது தான் இதற்கு காரணம்.
கிரீன் லேண்டின் தலைநகரம் நூஹ். கிரீன் லேண்டின் மொத்த மக்கள் தொகையை கேட்டால் சற்று அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும்... எவ்வளவு தெரியுமா? வெறும் 56,000 பேர்.
இந்த நாட்டின் மொத்த பரப்பளவு 21.66 லட்சம் சதுர கிலோ மீட்டர். ஆனால், இதில் 20 சதவிகிதம் மட்டுமே பனியும், ஐஸ்கட்டிகளும் இல்லாமல் இருக்கும்.
இந்த நாட்டில் விவசாயம் நினைத்து பார்க்க முடியாது ஒன்று. அதையும் மீறி அந்த நாட்டினர் விவசாயம் செய்ய விருப்பபட்டால், அந்த நாட்டின் தென் பகுதியில் செய்யலாம்.
இன்னும் கிரீன் லேண்டின் பொருளாதாரம் மீன்பிடி தொழிலை நம்பியே இருந்து வருகிறது.
ட்ரம்பும், கிரீன் லேண்டும்...
டிரம்ப், 'கிரீன் லேண்டை வாங்க வேண்டும்' என்று நினைப்பதற்கு மிக முக்கிய காரணம் 'அதன் அமைவிடம்'. கிரீன் லேண்ட் அமெரிக்காவிற்கு மிக அருகில் உள்ளது. டென்மார்க்கை விட, வட அமெரிக்கா தான் கிரீன் லேண்டிற்கு மிக பக்கம்.
அப்படியான ஒரு இடத்தை அமெரிக்கா விட்டுக்கொடுக்கக்கூடாது என்று நினைக்கிறார். மேலும், கிரீன் லேண்ட் மிக முக்கிய கடல்பாதையை கொண்டுள்ளது. கிரீன் லேண்ட் அமெரிக்காவிற்கு சொந்தமானால், இன்னும் எளிதாக ஐரோப்ப நாடுகளுடன் அமெரிக்கா கடல் வணிகம் செய்யலாம்.
ட்ரம்ப் கிரீன் லேண்ட் பற்றி கூறும்போது, 'அமெரிக்காவிடம் கிரீன் லேண்ட் இருந்தால் உலக அமைதியை நிலைநாட்டலாம். ஐரோப்பாவிக்கு அருகில் இருக்கும் கிரீன் லேண்டை அமெரிக்கா சொந்தமாக்கி கொள்வதன் மூலம் ரஷ்யா மற்றும் சீனாவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்" என்றுகூட கூறுகிறார்.
பொருளாதார ரீதியாக, காப்பர், லித்தியம், கோபால்ட் போன்ற கனிமங்கள் கிரீன் லேண்டில் கொட்டி கிடக்கின்றன. அதனால், இது அமெரிக்காவிற்கு சொந்தமானால் இந்த கணிமங்கள் மூலம் அமெரிக்க பெரும் பலன்களை அடையும்.
டென்மார்க் என்ன சொல்கிறது?
பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களுக்காக டென்மார்க் ஒவ்வொரு ஆண்டும் கிட்டதட்ட 1 பில்லியன் டாலர் கிரீன் லேண்டிற்காக செலவளித்து வருகிறது. இருந்தும் கிரீன்லேண்டை விட்டுதருவதற்கு டென்மார்க்கிற்கு மனமில்லை.
சமீபத்தில் பேசிய டென்மார்க் பாதுகாப்பு துறை அமைச்சர், 'சில ஆண்டுகளாக, நாங்கள் ஆர்டிக் பகுதியில் போதுமான முதலீடுகளை செய்யவில்லை. இனி எங்களுடைய இருப்பை பலப்படுத்தி கொள்ள செலவுகள் செய்வோம்' என்று பேசியுள்ளார்.
2019-ம் ஆண்டு, ட்ரம்ப் கிரீன்லேண்டை வாங்க முயன்றப்போது டென்மார்க் சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை. இப்போதும் அதே நிலைபாட்டில் தான் டென்மார்க் உள்ளது.
கிரீன் லேண்டின் நிலைப்பாடு
'விற்கப்படுவதற்கு அல்ல...இனியும் விற்பனைக்கு வராது' என்ற கிரீன் லேண்ட் பிரதமரின் ஒற்றை வாக்கியமே கிரீன் லேண்டின் நிலைப்பாட்டை கூறிவிடும்.
ஒருவேளை கிரீன்லேண்டை அமெரிக்கா வாங்கினால், அமெரிக்காவின் மொழி முதல் கலாச்சாரம் வரை அனைத்தும் கிரீன் லேண்டை இறுக அணைத்துக்கொள்ளும்... கிரீன் லேண்ட் தனது பாரம்பரியத்தை இழக்கக்கூடும். இதனால், பெரும்பாலான கிரீன் லேண்ட் மக்களும் அமெரிக்காவிற்கு பெரிய 'நோ' சொல்லி வருகிறார்கள். அவர்கள் 'முழு சுதந்திரத்தை' விரும்புகிறார்கள்.
இதற்கு முன்பே...
ராணுவத்தை கொண்டாவது கிரீன் லேண்டை வாங்கிவிட வேண்டும் என்று நினைக்கும் ட்ரம்ப், கிரீன் லேண்டை வாங்க நினைக்கும் முதல் அதிபர் இல்லை. அவர் முயற்சி முதல் முயற்சியும் அல்ல.
1950 காலக்கட்டங்களில், அமெரிக்காவிற்கும், சோவியத் யூனியனுக்கும் பனிப்போர் நடந்தப்போது, அப்போதைய அமெரிக்க பிரதமர் ஹாரி ட்ரூமேன் 100 மில்லியன் டாலருக்கு கிரீன் லேண்டை வாங்க முயன்றார். அதுவும் 100 பில்லியன் டாலரையும் தங்கத்திலேயே வாங்க முன்வந்தார். ஆனால், அப்போதும் டென்மார்க் மறுத்து தலையாட்டி விட்டது.
வாங்கினால்?!
ஒருவேளை அமெரிக்கா கிரீன் லேண்டை வாங்கினால், அது கொடுக்க வேண்டிய தொகையை சற்று பார்ப்போம்...
வரலாற்று மற்றும் கிரீன் லேண்டில் இருக்கும் கனிம வளங்களின் படி, கிரீன் லேண்டின் தற்போதைய விலை 230 மில்லியன் டாலர் என கணக்கிடுகிறார்கள்.
கட்டமைப்பு மற்றும் பொருளாதார ரீதியாக, கிரீன் லேண்ட் மற்றும் அமெரிக்கவை இணைக்க 1.5 டிரில்லியன் டாலர் தேவைப்படும்.
கிரீன் லேண்டில் இருக்கும் ஒவ்வொரு குடிமக்களுக்கும் இழப்பீடு தொகை கொடுக்கும் போது, அது 5.7 பில்லியனில் இருந்து 57 பில்லியன் டாலர் வரை ஆகிவிடும்.
கொரோனாவிற்கு பிறகு, அமெரிக்கா பொருளாதாரமே சற்று ஆட்டம் கண்டிருக்கும் நிலையில், இது நிச்சயம் அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதிக்கலாம்.
'டென்மார்க்கும், கிரீன் லேண்டும் 'நோ' சொல்லிகொண்டிருக்க... ட்ரம்பின் அடுத்த மூவ் என்ன?' என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.