Hanumankind: கேரளாவிலிருந்து உலக அரங்கை ஆளும் ராப் நட்சத்திரம்!
இசைக்கான களம் இப்போது பரந்து விரிந்திருக்கின்றது. கேசட், சி.டி-களில் பாடல்கள் கேட்கும் வழக்கம் முற்றிலுமாக அழிந்து, யூட்யூப், ஸ்பாடிஃபை என்ற செயலிகளுக்கு நாம் மாறியிருக்கிறோம்.
இப்படியான தொழில்நுட்பங்கள் இலகுவாகும்போது, பலரும் தங்களின் திறமையை வைத்து களத்தைத் தேடிக் கொள்கிறார்கள்.

உலகத்தின் கடைகோடியில் இசைக்கப்படும் ஒரு பாடலை இன்று நாம் இங்கிருந்து கூடக் கேட்கலாம். இப்படியான தொழில்நுட்பங்களின் வளர்ச்சி ஒரு கலைஞனுக்கு உலகெங்கும் அடையாளத்தைத் தேடிக் கொடுக்கிறது.
இது போன்ற விஷயங்களால்தான் இன்று சுயாதீன இசைத்துறை நல்லதொரு வளர்ச்சியை எட்டியிருக்கிறது.
சர்வதேச மியூசிக் ஆர்டிஸ்ட்களில் முக்கியமானதொரு இடத்தைப் பிடித்திருப்பவர் ஆலன் வால்கர். நார்வேயிலிருந்து அவர் இசையமைக்கும் பாடல் ஒவ்வொன்றும் இங்கும் நல்ல கவனத்தைப் பெறுகிறது.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவரிடம், "இந்திய மியூசிக் ஆர்டிஸ்ட்களில் நீங்கள் யாருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறீர்கள்?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், "ஹனுமன்கைண்ட் என்ற ஒருவர் இருக்கிறார். அவருடைய இசை முறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவருடன் நான் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்," எனக் கூறினார்.

கேரளாவைச் சேர்ந்த இந்த இளைஞனின் இசை, நார்வேயிலிருக்கும் ஒருவரைச் சேர்ந்திருக்கிறது.
ஆலன் வால்கருக்கு மட்டுமல்ல, ஹனுமன்கைண்ட்தான் தற்போது பலருக்கும் பிடித்தமான ஒரு ராப் சிங்கர்.
துள்ளல் இசையுடன் கூடிய அவருடைய ஆங்கில ராப் பாடல்கள்தான் தற்போது இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கின்றன.
ஹனுமன்கைண்ட் என்பது அவரது உண்மையான பெயர் கிடையாது. இசைத்துறையில் களமிறங்கும் பல ராப் பாடகர்கள், தங்களின் உண்மையான பெயர்களை அல்லாமல் புனைப்பெயர்களின் மூலம் அறிமுகமாவார்கள்.
அப்படி, சூரஜ் செருகட் என்ற இந்த இளைஞர், ஹனுமன்கைண்ட் எனத் தனக்குப் புனைப்பெயரையும் சேர்த்துக் கொண்டார்.
இந்துக் கடவுளான ஹனுமானின் பெயரை முதலிலும் வைத்து, அன்பு என்ற பொருள் கொண்ட "கைண்ட்" என்ற வார்த்தையைத் தனது பெயருக்குப் பின்பும் சேர்த்துக் கொண்டார்.

இப்படித்தான் அவருக்கு புனைப்பெயரைச் சூட்டியிருக்கிறார். இவருடைய பலமே, இவர் ஆங்கிலம் பேசக்கூடிய தொனிதான்.
கேரளாவில் பிறந்த இவர், தன்னுடைய தந்தையின் பணி நிமித்தம் காரணமாக நைஜீரியா, சவுதி அரேபியா, துபாய், கத்தார் ஆகிய நாடுகளுக்கும் பயணித்து, அமெரிக்காவில் செட்டில் ஆகுகிறார்.
மீண்டும் 2012-ம் ஆண்டு தன்னுடைய பட்டப்படிப்பிற்காகத்தான் இந்தியாவுக்கு வந்திருக்கிறார். பிசினஸ் அட்மினிஸ்ரேஷன் பிரிவில் பட்டப்படிப்பையும் இவர் முடித்திருக்கிறார்.
அமெரிக்காவில் படித்ததனாலேயே இவர் அமெரிக்கத் தொனியில் ஆங்கிலம் பேசுவதில் திறன் வாய்ந்தவராக இருந்திருக்கிறார். அந்த ஆங்கிலத்தைத் தன்னுடைய ராப் பாடல்களில் தொடர்ந்திருக்கிறார்.
அத்தோடு வெஸ்டர்ன் இசையோடு தன்னுடைய அனுபவத்தையும் வரிகளாக சேர்த்து அமைப்பது இவருடைய பலம்.
முக்கியமாக, தன்னுடைய 'Genghis' எனப்படும் பாடல் உள்பட சில பாடல்களில் அரசியலும் பேசியிருக்கிறார்.

ஆங்கிலத்தில் ராப் பாடலை எழுதி பாடிய விதம் இவரை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டுச் செல்வதற்கும் உதவி புரிந்திருக்கிறது.
ஆங்கில ராப் பாடல்கள் மூலம் ரீஜினல் பிரிவை (Regional category) தாண்டி உலகத்தின் தலைசிறந்த கலைஞர்களுடன் போட்டியிட்டு புதியதொரு மைல்கல்லை தொட்டிருக்கிறார் ஹனுமன்கைண்ட்.
2010-ம் ஆண்டு முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 'NH 7 Weekender' என்ற இசைத் திருவிழா நடைபெற்று வருகிறது.
அப்படி, 2019-ம் ஆண்டு இந்த இசைத் திருவிழாவில் தன்னுடைய 'களரி' என்ற ஆல்பத்தை வெளியிட்டார் ஹனுமன்கைண்ட். இதன் பிறகு சில சுயாதீன ராப் பாடல்களைப் பாடி வந்தவருக்கு, கன்னட சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு, ஃபகத் பாசிலின் 'ஆவேஷம்' படத்தில் ஒரு ஆங்கில ராப் பாடலைப் பாடுவதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்தப் பாடல் மூலமாகக் கவனம் ஈர்த்தவர், கடந்த ஆண்டு 'பிக் டாக்ஸ்' என்ற சுயாதீன ராப் பாடல் ஒன்றை வெளியிட்டார்.

அந்தப் பாடல் இவரை க்ளோபல் ஸ்டாராக உருவெடுக்க வைத்தது. இந்தப் பாடலின் வெற்றி இவருடைய தனிப்பட்ட வெற்றி மட்டுமே கிடையாது.
இந்திய ஹிப் ஹாப் இசைக்கு கிடைத்த பெருமையாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த 'பிக் டாக்ஸ்' பாடலைப் படம்பிடித்த விதம், ஹனுமன்கைண்டின் வெஸ்டர்ன் இசை ஆகிய ஹைலைட் விஷயங்கள், பாடலை அதிரடி ஹிட்டடிக்க வைத்தன.
200 மில்லியன் வியூஸை தாண்டி இன்றும் அந்தப் பாடல் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருக்கிறது!
இந்தப் பாடல் மூலம் பல மேடைகளில் ஹனுமன்கைண்டுக்கு பல அங்கீகாரங்களும் கிடைத்தன. இதோ, இந்தப் பாடல் ஏற்படுத்திக் கொடுத்த வரவேற்புக்குப் பிறகு, ஆஷிக் அபுவின் 'ரைஃபிள் க்ளப்' படத்தில் அதிரடி காட்டும் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
'பிக் டாக்ஸ்' பாடலுக்குப் பிறகு, அவர் வெளியிடப்போகும் சுயாதீனப் பாடலுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
அந்தச் சமயத்தில், பார்வையாளர்களின் வைப் பல்ஸைச் சரியாகக் கணித்து, 'ரன் இட் அப்' என்ற பாடலை வெளியிட்டு மீண்டும் அதிரடி காட்டினார்.
அடுத்தடுத்து இரண்டு பாடல்களின் ஹிட் மூலம், க்ளோபல் மியூசிக் ஆர்டிஸ்ட்களில் ஒருவராக தற்போது மிளிர்கிறார் ஹனுமன்கைண்ட்.

இதுமட்டுமல்ல, 'கோச்செல்லா' என்கிற சர்வதேச உயரிய இசை மற்றும் கலைத் திருவிழாவில் இம்மாதம் இவர் பெர்ஃபார்ம் செய்திருந்தார்.
இந்தக் கலைத் திருவிழாவில்வில் பெர்ஃபார்ம் செய்யும் முதல் இந்திய ஹிப் ஹாப் இசைக் கலைஞர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் ஹனுமன்கைண்ட்.
கூடிய விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகப் போவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. தமிழகத்திலும் சேட்டனை வரவேற்க பலரும் வெயிட்டிங்!
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
