ஆட்டோ கட்டண உயா்வு: அரசு தீவிர பரிசீலனை! போக்குவரத்துத் துறை
`house of horror' - திகில் வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட 3 சிறுவர்கள் மீட்பு.. பகீர் வாக்குமூலம்
ஸ்பெயினின் புறநகரான ஓவியோடோவில் ஒரு வீடு. அந்த வீட்டிலிருந்து வித்தியாசமான சத்தங்கள் வருவதாக காவல்துறைக்கு புகாரளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கியது காவல்துறை.
அந்த வீட்டில் அமெரிக்கா, ஜெர்மன் குடியுரிமை பெற்ற 53 வயதான ஆணும் 48 வயது பெண்ணும் வசித்து வந்தனர். அவர்களின் வீட்டை காவல்துறை சோதனை செய்தது. வீடு முழுவதும் குப்பைகளால் நிரம்பியிருந்தது. தூர்வாடையால் காவல்துறை அதிகாரிகளால் உள்ளே செல்லவே முடியவில்லை.

அப்போதுதான் காவல்துறை அதிகார்கள் மூன்று இரும்பு கூடுகளை கண்டுபிடிக்கிறார்கள். அந்த ஒவ்வொருக் கூட்டிலும் சிறுவர்கள், மாஸ்க் அணிந்த நிலையில் இருந்தனர். அவர்கள் மனிதர்களைப் பார்த்ததும் பயத்தோடு கத்தத்தொடங்கினார்.
உடனே அந்த சிறுவர்களை காவல்துறை சமாதானப்படுத்தி வெளியே அழைத்து வந்தனர். அந்த சிறுவர்கள் வெளியே வந்ததும் ஆழமான மூச்சை இழுத்து விட்டு ஆசுவாசமான காட்சி வைரலானது.
அந்த சிறுவர்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை அதிகாரி, ``2021-ம் ஆண்டு கோரோனா தொற்றுநோய்க்கு பயந்த சிறுவர்களின் பெற்றோர், அவர்களை பத்திரமாக பாதுகாப்பதாக நினைத்து வீட்டுக்குள் அடைத்து வைத்திருக்கிறார்கள். டயப்பர் அணிவிக்கப்பட்டு, மாஸ்க் அணிவிக்கப்பட்டு கண்டிப்புடன் இருக்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.
ஆனால், உலகின் இயல்பு நிலை திரும்பியதற்குப்பிறகும் அவர்கள் சிறுவர்களை வெளியே விடவில்லை. அக்கம்பக்கத்தினார் சிறுவர்கள் பற்றி விசாரிக்கும்போதெல்லாம், அவர்கள் விடுதியில் தங்கி படித்து வருவதாக தெரிவித்திருகின்றனர்.
தற்போது சிறுவர்களை மீட்டிருக்கிறோம். அவர்களின் பெற்றோரை கைது செய்திருக்கிறோம். ஐந்து பேருக்கும் மனநல சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
கைது செய்யப்பட்ட தம்பதிகள் குறித்துப் பேசிய அந்தப் பகுதியில் வசிக்கும் உள்ளூர் வாசி ஒருவர், ``அந்த வீட்டை கடக்கும்போதே திகிலாக இருக்கும். எங்கள் பகுதியில் அந்த வீட்டுக்குப் பெயரே திகில் வீடுதான். ஏற்கெனவே ஒருமுறை அந்த வீட்டில் இருக்கும் சிறுவர்கள் பள்ளிக்குச் செல்வதில்லை என்பதால் காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால் அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போதுதான் அந்த சிறுவர்களை மீட்டிருக்கிறார்கள்" என்கிறார்.