Israel - Gaza: 'போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்பும் தொடரும் தாக்குதல்!' - காரணம் என்ன?!
2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் கடந்த வாரம் முற்று பெறுவதுப்போல சென்று மீண்டும் தொடங்குவது போல ஆகியுள்ளது.
கிட்டத்தட்ட 15 மாதங்கள் நடந்த இந்தப் போரில் இருதரப்பிலும் நூற்றுக்கணக்கான நபர்கள் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்...ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
பாலஸ்தீனம் தொடக்கம்
பெரும்பாலும், இஸ்ரேல் தான் பாலஸ்தீனம் மீது போரை தொடங்கும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக, இந்தப் போர் பாலஸ்தீனம் தொடங்கியதாக அமைந்தது. வான்வழி தாக்குதல், தரைவழி தாக்குதல் என கோரமான தாக்குதல்கள் தொடர்ந்துகொண்டே இருந்தன. இதில் ஏகப்பட்ட மக்கள் வீடு, வாசல், தொழிலை இழந்து வாடினர். பல
குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்தனர்.
பாலஸ்தீனத்தோடு முதலில் தொடங்கிய இஸ்ரேல் போர், நாட்கள் செல்ல செல்ல பாலஸ்தீனத்திற்கு உதவ வந்த லெபனான், ஈராக் என ஒவ்வொரு நாடுகளுடனும் தொடர்ந்தது...நீண்டது.
பாதிப்புகள்...
இந்தப் போரினால் குறிப்பிட்ட அந்த நாடுகள் மட்டுமல்லாமல், பிற உலக நாடுகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டன. ஏற்கனவே நடந்துகொண்டிருந்த ரஷ்யா - உக்ரைன் போர் இன்னுமே முற்றுப்பெறாத சூழலில், 'இந்த போர் தொடங்கியது...பல நாடுகளுடன் தொடர்ந்தது' என இவை 'மூன்றாம் உலக போர்' ஏற்படுமோ என்ற அச்சம் வேறு பரவலாக இருந்தது.
இதன் விளைவாக, உலக நாடுகள் அனைத்தும் 'இந்தப் போரை நிறுத்த வேண்டும்...முடிவுக்கு கொண்டுவர வேண்டும்'என்று ஒருமித்து குரல் எழுப்பி வந்தது.
இஸ்ரேல் - பாலஸ்தீனப் போருக்கு பின்பு தொடங்கிய, இஸ்ரேல் - லெபனான் போர் கூட முடிவுக்கு வர, 'இந்தப் போர் எப்போது முடியும்?' என்ற எதிர்பார்ப்புகள் இருந்தது.
முன்னர், பலமுறை இதற்கான முயற்சிகள் எடுத்தும், எதுவும் கைக்கூடவில்லை. ஆனால், கடந்த வாரம், அமெரிக்கா மற்றும் கத்தார் மத்தியஸ்தம் செய்ய இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் உறுதியானது.
உறுதியானாலும்...
ஒப்பந்தம் உறுதியானாலும், பணய கைதிகளை விடுவிப்பதில் இழுப்பறிகள் நடந்து வந்தன. இந்த ஒரு காரணத்தினால், 'போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்தாகி விடுமோ?' என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அப்படி ஏதும் நடைபெறாமல், கடந்த வார வெள்ளிக்கிழமை, பாதுகாப்பு சபையை கூட்டி, போர் நிறுத்த ஒப்பந்தத்தை உறுதி செய்தார் நெதன்யாகு.
இதையொட்டி, இரு நாடுகளும் பணய கைதிகளை விடுவித்தது. முதலில் பாலஸ்தீனம் 3 பெண் பணய கைதிகளை விடுவிக்க, இஸ்ரேல் 90 பணய கைதிகளை விடுவித்தது.
இப்படி போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தமும் முழுவதுமாக போடப்படவில்லை. அந்த ஒப்பந்தம் போடப்பட்டது கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களுக்கு மட்டுமே.
தற்போது போடப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணய கைதிகளும், சில நாட்களுக்கு போர் நிறுத்தமும் இருக்கும்.
அடுத்து, ஒன்றரை மாதத்திற்கு பிறகு, இன்னொரு கட்ட பேச்சுவார்த்தை நடக்கும். அப்போது இன்னும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருந்தது.
ஆனாலும்...
ஆனால், இப்போதும் இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல் நடந்துக்கொண்டே தான் இருக்கிறது. 'என்ன?' என்று அதிர்ச்சி ஆக வேண்டாம். இந்தத் தாக்குதல்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படாத மேற்கு காசாவில் நடந்து வருகின்றது. இந்த இடத்தில் கடந்த சில மணி நேரமாக தீவிர தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்தப் பகுதியில் இஸ்ரேல் மேலும் மேலும் தனது படைகளை குவித்து வருகிறது. இந்தத் தாக்குதல் 'இஸ்ரேல் - பாலஸ்தீன போர் நிறுத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுமோ' என்கிற அச்சம் தற்போது உலக நாடுகளின் மத்தியில் எழுந்துள்ளது.