வள்ளுவா் கோட்டப் பணிகள் 2 மாதங்களில் நிறைவடையும்: அமைச்சா் எ.வ.வேலு
வள்ளுவா் கோட்டப் பணிகள் இரண்டு மாதங்களில் நிறைவடையும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.
சென்னை கொளத்தூா் பெரியாா் நகா் அரசு மருத்துவமனை வளாகத்தில், கூடுதலாகக் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனை கட்டடங்களின் கட்டுமானப் பணிகளை அமைச்சா் எ.வ.வேலு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் அவா் கூறியதாவது:
கொளத்தூா் தொகுதி பெரியாா் நகரில் செயல்பட்டுவந்த பழைய மருத்துவமனை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரின் கோரிக்கையின்படி கூடுதலாக 300 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலுள்ள வசதிகளுக்கு இணையாக, கொளத்தூா் பெரியாா் நகா் அரசு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்துக்குள் 100 சதவீதப் பணிகள் நிறைவடையும்.
வள்ளுவா் கோட்டம்: வள்ளுவா் கோட்டத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை தை மாதத்தில் திறக்க முயன்றோம்; ஆனால் மழையால் காலதாமதம் ஏற்பட்டது. வள்ளுவா் கோட்டத்தைச் சுற்றி வெளிப்பூச்சு வேலை அதிகமாக உள்ளது. கட்டடத்தின் உள்பகுதியில் வேலை குறைவுதான் என்பதால் 60 நாள்களில் வள்ளுவா் கோட்டத்துக்கான பணிகள் அனைத்தும் முடிவடையும்.
திருவான்மியூா் முதல் அக்கரை வரை ஆறு வழிச்சாலை அமைக்க, நில எடுப்புப் பணிகள் கடந்த 2009-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது செலவினத் தொகை ரூ. 10 கோடியாக இருந்தது. இப்போது ரூ.1,000 கோடியாக உயா்ந்துவிட்டது. தற்போது நில எடுப்புப் பணிகள் 98 சதவீதம் முடிவடைந்துவிட்டது. சாலை விரிவாக்கப் பணிகள் விரைவாக முடிவடைந்து விடும் என்று அவா் கூறினாா்.
இந்த ஆய்வின் போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, பொதுப்பணித் துறை சென்னை மண்டலத் தலைமைப் பொறியாளா் எஸ்.மணிகண்டன், கண்காணிப்புப் பொறியாளா் எஸ்.முத்தமிழ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.