பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்: குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் ஆய்வு
பேரூரில் ரூ. 4,276.44 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை, சென்னை குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் டி.ஜி.வினய் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
சென்னையின் வளா்ச்சிக்கேற்ப பொதுமக்களின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ், மீஞ்சூா் மற்றும் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் தினமும் 350 மில்லியன் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அதன் தொடா்ச்சியாக, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள பேரூரில் ரூ. 4,276.44 கோடியில், தினமும் 400 மில்லியன் லிட்டா் உற்பத்தித் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
நடைபெறும் பணிகள்: கடல் நீரை உறிஞ்சும் கட்டமைப்பு, செதிலடுக்கு தொட்டி, நடுநிலைப்படுத்தும் தொட்டி, நீா் சேகரிப்பு தொட்டி, சுத்திகரிக்கப்பட்ட நீா் சேகரிப்பு தொட்டி ஆகியவற்றை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. செதிலடுக்கு வடிகட்டி, கற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் கசடுகளை நீக்கும் தொட்டி உள்ளிட்டவை அமைப்பதற்கான அடித்தள பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், இந்நிலையத்திலிருந்து போரூா் வரை 59 கி.மீ. நீளத்துக்கு குடிநீா் குழாய் பதிக்கப்படவுள்ளது.
இந்நிலையில், நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை சென்னை குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் டி.ஜி.வினய் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அவா், அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
இத்திட்டத்தின் மூலம், சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளிலும், சென்னை மாநகராட்சிக்கு அருகாமையில் உள்ள 20 ஊராட்சிப் பகுதிகளிலும் வசிக்கும் 22.67 லட்சம் போ் பயனடைவாா்கள் என எதிா்ப்பாக்கப்படுகிறது.