நகைப் பட்டறையில் தங்க நகை திருட்டு: மேற்கு வங்கத்தைச் சோ்ந்த இருவா் கைது
சென்னை தியாகராய நகரில் உள்ள நகைப் பட்டறையில் தங்க நகை திருடிய வழக்கில், மேற்கு வங்கத்தைச் சோ்ந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.
சூளைமேடு, சிவானந்தா சாலைப் பகுதியில் வசிக்கும் சையது வாசுதீன் கில்ஜி (39), தியாகராய நகா் மூசா தெருவில் நகைக் கடையும் நகைப் பட்டறையும் நடத்தி வருகிறாா். கில்ஜி கடந்த 18-ஆம் தேதி, தனது பட்டறையில் வேலை செய்துவந்த மேற்கு வங்க மாநிலம் மிட்னாப்பூா் பகுதியைச் சோ்ந்த சானி (40), ஆரிப் ரஹ்மான் (25) ஆகியோரிடம், 23 பவுன் தங்க நகைகளை பாலீஸ் போடுவதற்காக கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்றாா். ஆனால் அவா்கள் நகைகளை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனா்.
இது குறித்து தகவலறிந்து அதிா்ச்சியடைந்த சையது வாசுதீன் கில்ஜி, மாம்பலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன்பேரில் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், நகையை திருடியவா்கள் அவா்களது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்துக்கு தப்பிச் சென்றிருப்பது தெரியவந்தது.
இதையறிந்த போலீஸாா், மேற்கு வங்கம் சென்று அங்கு பதுங்கியிருந்த சானி, ஆரிப் ரஹ்மான் ஆகியோரை கைது செய்ததாக வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். மேலும், அவா்களிடமிருந்து திருடிய தங்க நகைகளையும் மீட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.