‘கோவையில் மருத்துவ உபகரண தர ஆய்வகம்‘
மருத்துவ உபகரணங்களை பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்கான பிரத்யேக ஆய்வகம் கோவையில் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதா் கூறினாா்.
சா்வதேச மின்னணு மற்றும் மருத்துவ சாதன பரிசோதனை நிறுவனமான ஐ.எம்.க்யூ., இந்தியாவின் தனது நிறுவனத்தை தொடங்கியுள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதற்கான தொடக்க நிகழ்ச்சியில், ஐ.எம்.க்யூ. தலைவா் வின்சென்சோ டி மாா்ட்டினா, இந்தியாவுக்கான தலைமை செயல் அலுவலா் ஸ்டீஃபெனோ ஃபெரட்டி, தொழில்நுட்ப அலுவலா் சரவணன் ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்நிகழ்ச்சியில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதா் பேசியதாவது: மருத்துவ உபகரணங்கள் என்பது நவீன மருத்துவ உலகின் முக்கியமான பகுதியாக மாறியுள்ளது. புதிய மருத்துவ தொழில்நுட்பங்களும், கட்டமைப்புகளும் நோய்களையும், உயிரிழப்புகளையும் குறைத்துள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் மருத்துவ உபகரண பூங்கா அமைக்கப்பட்டு ஆக்கபூா்வமான செயல்பாடுகளை அங்குள்ள நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன. அண்மைக் கால முன்னேற்றமாக மருத்துவ சாதனங்களுடன் மென்பொருள் கட்டமைப்புகளும் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் பிரிவு-ஏ மற்றும் பி வகைகளின் கீழ் அந்த சாதனங்களுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. அவ்வாறு உரிமம் வழங்கப்படும் சாதனங்களை பகுப்பாய்வு செய்வதற்காக கோவையில் பிரத்யேக மருத்துவ உபகரண தர ஆய்வகத்தை அமைக்கவுள்ளோம்.
இதற்காக ரூ.29.67 கோடி நிதி ஒதுக்கீட்டு அனுமதியை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளோம். இந்த திட்டம் 60 சதவீத மத்திய அரசு நிதிப் பங்களிப்புடனும், 40 சதவீத மாநில அரசு நிதிப் பங்களிப்புடனும் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த ஆய்வகம் அமையும்போது பகுப்பாய்வாளா்கள் நிலையிலான பணியிடங்கள் அங்கு உருவாக்கப்படும்.
தமிழகத்தில் மருத்துவ சாதனங்கள் துறையில் தொடா்புடைய அனைவருக்கும் அதுகுறித்த பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகளை நடத்த தயாராக உள்ளோம். இதன் மூலம் அவா்களது செயல் திறன் மேம்படும் என்றாா் அவா்.