விண்ணப்பித்துவிட்டீர்களா..? விமானப்படையில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை!
Karan Thapar: ``என்ன குற்றம்னு சொல்லாமலே ஊடகவியலாளர் கரன் தாப்பருக்கு சம்மன்'' - முதல்வர் ஸ்டாலின்
`தி வயர்' செய்தி நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன், கரண் தாபர். இவர்கள் இருவரும் தொடர்ந்து அரசியல் களத்தில் தீவிரமாக இயங்கிவருகின்றனர்.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நிகழ்த்தியதாகக் கூறப்படும் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து கட்டுரை தி வயர் கட்டுரை வெளியிட்டிருந்தது.
அதனால், இந்த செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் வரதராஜனுக்கு எதிராக 'இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்' செய்ததாக அஸ்ஸாம் காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு ஆகஸ்ட் 12-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வரதராஜனுக்கு எதிராக கைது நடவடிக்கை எடுப்பதற்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
அதே நாளில் அஸ்ஸாம் கவுகாத்தி குற்றப் பிரிவு காவல்துறை, சித்தார்த் வரதராஜன் மீதும், அந்த செய்தி நிறுவனத்தின் மற்றொரு மூத்த பத்திரிகையாளர் கரண் தாபர் மீதும் `பல்வேறு குழுக்களிடையே பகைமையை வளர்ப்பது; இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் தவறான தகவல்களைப் பரப்புதல். பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் அறிக்கைகள். மற்றும் கிரிமினல் சதி ஆகிய பிரிவுகள் 152-ன் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சம்மன் அனுப்பியிருக்கிறது.
மேலும், ஆகஸ்ட் 22-ம் தேதி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த சம்மனில் எந்தக் குற்றத்துக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது பற்றி குறிப்பிடவே இல்லை.
இது தொடர்பாக சித்தார்த் வரதராஜன் தனியார் செய்தி நிறுவனத்திடம் அளித்தப் பேட்டியில், ``திங்கள்கிழமை இரவு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறோம். சம்மனை வழங்கிய காவல் ஆய்வாளருக்கு நாங்கள் விரைவு அஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் வழியாகவும் பதில் அனுப்பியுள்ளோம்.
அதில், அவரது சம்மன் சட்டவிரோதமானது. அவர்கள் அனுப்பிய சம்மனில் எஃப்.ஐ.ஆர். நகல் இல்லை, நாங்கள் என்ன குற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது என்ற விவரங்கள் இல்லை, எஃப்.ஐ.ஆரின் தேதி கூட இல்லை.
நாங்கள் ஏற்கெனவே ஒரு எஃப்.ஐ.ஆர் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளோம் என்பதையும் அவருக்கு நினைவுபடுத்தியுள்ளோம்.
மேலும், காவல் ஆய்வாளருக்கு அனுப்பிய எழுத்துப்பூர்வ பதிலில், இந்தப் புதிய வழக்கின் மேலும் எந்த நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, எஃப்.ஐ.ஆரின் நகல் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
அப்படி வழங்கினால் சட்ட நடைமுறைக்கு இணங்க, விசாரணைக்கு இணங்க தயாராக இருக்கிறோம். தேவையெனில் ஆன்லைனிலோ, அல்லது நான் இருக்கும் டெல்லிக்கோ கூட வந்து நீங்கள் விசாரிக்கலாம். ஆனால், எங்களுக்கு எஃப்.ஐ.ஆர் வழங்கப்பட வேண்டும்' எனக் குறிப்பிட்டிருக்கிறோம்" என்றார்.
ஊடகவியலாளர்கள் மீதான் தொடர் அடக்குமுறை நடவடிக்கைக்கு பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா (PCI) மற்றும் இந்திய பெண்கள் பத்திரிகையாளர் சங்கம் (Indian Women Press Corps) கண்டனம் தெரிவித்துள்ளன.
முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``மூத்த பத்திரிகையாளர்கள் வரதராஜன் கரன் தாப்பர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பிய அஸ்ஸாம் காவல்துறையின் நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சில நாள்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிய போதிலும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. FIR நகல் மற்றும் வழக்கின் விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. கைது அச்சுறுத்தல் மட்டுமே உள்ளது.
சுதந்திரமான பத்திரிகையை நசுக்குவதற்காக ரத்து செய்யப்பட்ட தேசத்துரோகச் சட்டத்திற்கு மாற்றாக BNS-ன் பிரிவு 152 தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. கேள்விகள் கேட்பது தேசத்துரோகமாகக் கருதப்பட்டால் ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.