Kingdom: ``எனக்காக கேரவான் கதவுகள் திறக்கப்பட்டன!'' - வைரலாகும் `கிங்டம்' பட நடிகரின் பேச்சு!
'கிங்டம்' திரைப்படம் இன்று பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
விஜய் தேவரகொண்டா, பாக்யஶ்ரீ போஸ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் வெங்கடேஷ் பேசிய காணொளிதான் தற்போது சோசியல் மீடியா வைரல்.
மிகுந்த தன்னம்பிக்கையுடனும், துடிப்புடனும் மேடையில் பேசி அரங்கத்தை கைதட்டல் ஒலிகளால் நிரம்பச் செய்த வெங்கடேஷ், இதற்கு முன் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் வெளியான 'ரிபெல்' திரைப்படத்திலும் இவர் நடித்திருக்கிறார்.
நிகழ்வில் வெங்கடேஷ் பேசுகையில், "மலையாளத் திரைப்படங்களில் கூட்டத்தில் ஒருவனாக நடித்து, பிறகு சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றி, வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து, இன்று 'கிங்டம்' படத்தில் நடித்திருக்கிறேன்.
இப்படியான விஷயம் என் வாழ்க்கையில் நிகழ்வதற்கு 9 ஆண்டுகள் ஆகிவிட்டது. சொல்லப்போனால், எனக்காக கேரவான் கதவுகள் திறக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுதான்.
நான் ரஜினி சாரின் தீவிர ரசிகன். நான் மட்டுமல்ல, என்னுடைய குடும்பத்தினர் அனைவருமே ரஜினி சாரின் ரசிகர்கள்தான்.

ரஜினி சாரின் 'போடா அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்' என்கிற வசனம்தான் என்னுடைய மொபைல் ரிங்டோனாக வைத்திருக்கிறேன்.
நான் அனிருத் இசையமைப்பில் படத்தில் நடிப்பேன் என நினைத்துக்கூட பார்த்தது கிடையாது. சில ஆண்டுகளுக்கு முன் கொச்சியில் நடைபெற்ற அனிருத்தின் கான்சர்டுக்கு என்னுடைய நண்பர்கள் சென்றிருந்தனர்.
அந்த சமயத்தில் என்னால் அங்குச் செல்ல முடியவில்லை. அந்நேரம் என்னுடைய நண்பனிடம் 'பரவாயில்லை.
நான் அனிருத் இசையில் ஒரு நாள் நடிப்பேன்' என சொல்லியிருந்தேன். அந்த விஷயம் இப்போது கைகூடி வந்திருப்பதில் மகிழ்ச்சி.
சமீபத்தில் இந்தத் திரைப்படத்தின் என்னுடைய தோற்றம் கொண்ட போஸ்டரை வெளியிட்டிருந்தார்கள். அதை விஜய் தேவரகொண்ட அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
நான் இதுவரை 5 திரைப்படங்களில் நடித்திருக்கிறேன்.

அவை அனைத்தையும்விட அதிகமான மக்களின் அன்பு இந்தத் திரைப்படத்தில் எனக்கு வெளியீட்டுக்கு முன்பே கிடைத்திருக்கிறது. இந்தப் படத்திற்காக என்னுடைய இயக்குநர் கெளதம் சார் என்னை ஆடிஷன் ஏதுமின்றி தேர்வு செய்தார்.
என்னுடைய தாயாரிடம் 'உங்களுடைய மகன் சிறந்த நடிகன்' எனத் தெரிவித்திருக்கிறார். அதுதான் எனக்கு விருதைப் போன்றது.
என்னுடைய அம்மாதான் என்னுடைய முதல் ரசிகை. திரையரங்குகளில் படத்தைப் பாருங்கள். என்னுடைய காட்சிக்கு மறக்காமல் கைதட்டுங்கள்." என உற்சாகத்துடன் பேசினார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...