Mysskin:`மிஷ்கினை வரவேற்கும் மலையாள திரையுலகம்' - துல்கர் சல்மான் படத்தில் ஒப்பந்தம்
திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பல்வேறு திரைத்துறைகளில் ஆளுமை செலுத்திவரும் மிஷ்கின் நடிகராகவும் மக்கள் மனதில் பெரும் இடத்தைப் பிடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான டிராகன் படத்தின் அவரது கதாப்பத்திரம், ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து தமிழ்படங்களில் நடித்து வந்த மிஷ்கினை மலையாளத் திரையுலகமும் வரவேற்றிருக்கிறது.

மலையாள இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மானின் 40வது படமாக உருவாகிவரும் 'ஐ'ம் கேம்' ('I'm Game') படம், ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான மிஷ்கின் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இது தொடர்பாக இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் தன் சமூக ஊடகப் பக்கத்தில், ``பன்முகத்தன்மை கொண்ட, அற்புதத் திறமையுடைய மிஷ்கின் சாரை ImGame குழுவிற்கு வரவேற்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்! வரவிருக்கும் ஒரு அற்புதமான விளையாட்டுக்குத் தயாராகுங்கள்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் மிஷ்கின், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``IMGame எனும் நம்பமுடியாத திறமையான குழுவில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். வரவிருக்கும் ஒரு அற்புதமான விளையாட்டுக்குத் தயாராகுங்கள்." எனக் குறிப்பிட்டிருந்தார்.
ரசிகர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகிவருகிறது.