Indonesia: இயேசு கிறிஸ்துவை குறிப்பிட்டு பேசிய திருநங்கை TikTok பிரபலம்; சிறைத் ...
Nilgiris: ``பலா மரங்களை தேடி வரும் யானைகளுக்கு என்ன பதில் சொல்வோம்..'' -வேதனையில் பழங்குடிகள்
சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலம் என்றாலும் மரங்களை வெட்டுவதற்கு தடைகளும் கட்டுப்பாடுகளும் நடைமுறையில் உள்ளன. குடியிருப்பு அல்லது சாலையில் விழும் நிலையில் உள்ள முதிர்ந்த ஆபத்து மரங்களாக இருந்தாலும் அதனை அகற்ற மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு அனுமதி அளிக்க வேண்டும். அண்மை காலமாக தனியார் எஸ்டேட்களில் மரங்களை வெட்ட
இந்த குழுவால் வழங்கப்படும் அனுமதிகள் அதிருப்தி அளிப்பதாக சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், யானைகளின் மிக முக்கிய வழித்தடமாகவும் வாழிடமாகவும் விளங்கி வரும் குன்னூர் மலைச்சரிவில் உள்ள தனியார் எஸ்டேட்டில் பலா மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பலா மரங்களை வெட்டி லாரிகள் மூலம் கொண்டு செல்கின்றனர். இந்த செயலுக்கு உள்ளூர் பழங்குடி மக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து தெரிவித்த பர்லியார் வன கிராம பழங்குடிகள், "மலையடிவாரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் கோடை காலத்தில் யானைகள் அனைத்தும் கூட்டம் கூட்டமாக மலை மேல் ஏறி வருவது வழக்கம். யானைகளின் வருகையை சொல்லி வைத்ததைப் போல காட்டுப் பலா மரங்கள் அனைத்திலும் கொத்துக் கொத்தாக பல காய்கள் காய்த்துத் தொங்கும். குட்டிகளுக்கும் பாலாவை கொடுத்து யானைகள் பசியாறிச் செல்லும். இந்த பகுதியில் யானை மனித எதிர்கொள்ளல்களை தவிர்க்க பலா மரங்கள் முக்கிய பாதுகாப்பாக இருந்து வந்தன. வனத்துறை அதிகாரிகளோ வருவாய்த்துறை அதிகாரிகளோ இந்த பகுதியில் வந்து முறையாக ஆய்வு செய்யாமல் முதிர்ந்த பலா மரங்கள் என்ற பெயரில் காய்த்துக் குலுங்கும் காட்டு பலா மரங்களை வெட்டுவதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். ஏகப்பட்ட பலா மரங்களை வெட்டி கடத்தி வருகின்றனர். எங்களால் தடுக்க முடியவில்லை. இந்த கோடை சீசனுக்கு பலாவை தேடி வந்து ஏமாற்றத்துடன் திரும்பும் யானைகளுக்கு என்ன பதில் சொல்வோம் " என வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பதில் அளித்துள்ள நீலகிரி வன கோட்டை மாவட்ட அலுவலர் கௌதம், "இந்த பகுதியில் தனியாருக்குச் சொந்தமான எஸ்டேட்டில் 47 முதிர்ந்த பலா மரங்களை மட்டுமே வெட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றை மட்டுமே வெட்டியுள்ளனர். யானைகளின் வாழிடம் என்பதால் அதற்கு ஈடாக அதிக எண்ணிக்கையில் புதிய பலா மரக்கன்றுகளை நடவு செய்ய உத்தரவிட்டுள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
