Ooty: சிங்கத்தின் கம்பீரம்.. படையை வழி நடத்திய பெண் அதிகாரி... திரும்பி பார்க்க வைத்த ஆளுமை!
இந்திய நாட்டின் 76 - வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டி அரசு கல்லூரி மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் லக்ஷ்மி பவ்யா தன்னீரு தேசிய கொடியை ஏற்றி வணக்கம் செலுத்தினார். காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
அரசுத்துறையைச் சேர்ந்த பலரும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், பழங்குடி மக்களின் பாரம்பர்ய நடனம், பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. காவல்துறையின் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை தலைமையேற்று நடத்திய நீலகிரி மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளரின் வீர முழக்கமும், கம்பீர கர்ஜனையும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் திரும்பப் பார்க்க வைத்திருக்கிறது.
அணிவகுப்பை தலைமையேற்று நடத்திய அனுபவம் குறித்து பகிர்ந்த ஆயுதப்படை ஆய்வாளர் சரண்யா, "நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நான் 15 ஆண்டுகளாக காவல்துறை சேவையில் இருக்கிறேன். முதல் தலைமுறையாக கல்வியில் உயர்ந்து கல்லூரி சென்றேன். கபடியில் ஏற்பட்ட அதீத ஆர்வம் காரணமாக சிறந்த கபடி வீராங்கனைகளில் ஒருவராக மாற்றியது. அப்பாவின் கனவான காவலர் பணியில் சேர்ந்தேன்.
படிப்படியாக பதவி உயர்வு பெற்று தற்போது ஆயுதப்படை ஆய்வாளராக இருக்கிறேன். 76 - வது குடியரசு தின விழா அணிவகுப்பை தலைமையேற்று நடத்தும் அரிய வாய்ப்பு கிடைத்தது.
கடந்த சில நாள்களாக அனைவரும் தீவிர ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டு வந்தோம். அனைவரின் கூட்டு முயற்சி மற்றும் ஒத்துழைப்பால் மிகவும் நேர்த்தியான, கம்பீரமான அணிவகுப்பு மரியாதையாக இருந்தது. வாளேந்தி முன் வரிசையில் நின்று அணிவகுப்பை நடத்திய தருணம் மிகவும் பெருமையாகவும் கம்பீரமாகவும் உணர்ந்தேன். பெண்கள் பலரும் இதுபோன்ற பணிகளுக்கு வர வேண்டும்" என்றார்.
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பல ஆண்டுகளுக்கு பின் பெண் அதிகாரி ஒருவர் அணிவகுப்பை தலைமையேற்று நடத்தியது குறிப்பிடத்தக்கது.