PBKS vs KKR: "சஹல் பந்தை திருப்பியதும்..!" - ஸ்பெஷல் வின்னிங் குறித்து ஸ்ரேயாஸ்
சண்டிகரில் நேற்று (ஏப்ரல் 15) நடைபெற்ற கொல்கத்தா vs பஞ்சாப் போட்டி ஐபிஎல்லின் வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியாகப் பதிவாகியிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் பாஞ்சாப் அணியின் பவுலர்களே. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 15.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 8 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 62 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தது.

ஆனால், பஞ்சாப் பவுலர்களின் அசாத்திய பந்துவீச்சில் நிலைகுலைந்த கொல்கத்தா, அடுத்த 33 ரன்களுக்கு மீதமிருந்த ஏழு விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு 16 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் சாதனை வெற்றிபெற்றது. பஞ்சாப் தரப்பில் 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகள் வீழ்த்திய சஹல் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
ஸ்ரேயாஸ் சொன்னது என்ன?
வெற்றிக்குப் பின்னர் பேசிய பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், "இதை வார்த்தைகளில் சொல்வது கடினம். என்னுடைய உள்ளுணர்வுகள் சொல்வதை நான் கேட்டேன். பந்து சற்று திரும்புவதைப் பார்த்ததால், சஹலிடம் பந்தை இழுப்பிடித்து போடுமாறு கேட்டேன். சரியான வீரர்கள் சரியான இடத்தில் இருந்தனர். இதுபோன்ற வெற்றிகள் ஸ்பெஷலானவை. 16 ரன்களில் வெற்றிபெற்றதைப் பார்க்கையில், உண்மையில் நாங்கள் ஓரளவு நல்ல ஸ்கோர்தான் அடித்திருக்கிறோம். பவுன்ஸ் சீராக இல்லாததால் அதை மனதில் வைத்துக்கொள்ளுமாறு பவுலர்களிடம் கேட்டுக்கொண்டேன். அதை அவர்கள் அருமையாகச் செயல்படுத்தினர்.

முதல் இரண்டு ஓவர்களில் இரண்டு விக்கெட் என நல்ல மொமன்டம் கொடுத்தது. பிறகு, அந்த மொமன்டமை இரண்டு பேட்ஸ்மேன்கள் (ரஹானே, ரகுவன்ஷி) தங்கள் பக்கம் ஈர்க்க முயன்றனர். பின்னர், சஹல் உள்ளே வந்து பந்தைத் திருப்புவதைப் பார்த்ததும், எங்களின் நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் அதிகரித்தன. நேருக்கு நேர் அட்டாக்கிங் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். அதனால், அவர்கள் மிஸ்டேக் செய்ய, போட்டி எங்கள் பக்கம் திரும்பியது. இந்த வெற்றியின் மீது நாங்கள் அதிகம் ஆட்டம் போடாமல், அடக்கமாக இருப்பது முக்கியம். மேலும், இந்தப் போட்டியின் ஒவ்வொரு நேர்மறையான விஷயங்களையும் எடுத்துக்கொண்டு, அவற்றை அடுத்த போட்டியின் முதல் பந்திலிருந்தே நாங்கள் செயல்படுத்த வேண்டும்" என்று கூறினார்.