மகா கும்பமேளா: முதல் 6 நாளில் 7 கோடி பக்தா்கள் புனித நீராடல்
Pravinkoodu Shappu Review: கள்ளுக்கடையில் நடந்த கொலை; சிரிக்க வைக்கிறதா இந்த டார்க் காமெடி?
டார்க் காமெடி கலந்த த்ரில்லர் திரைப்படமாகத் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது `ப்ராவின்கூடு ஷாப்பு (புறாக்கூண்டு கள்ளுக்கடை)'
ப்ராவின்கூடு கள்ளுக்கடையின் உரிமையாளரான பாபு (சிவாஜித்) ஊரில் பலரிடம் வம்பு வளர்த்து வைத்திருக்கிறார். அவருடைய கள்ளுக்கடையில் பணிபுரிகிறார் கண்ணன் (செளபின் சாஹிர்). தனது மனைவி மெரிண்டாவுடன் (சாந்தினி ஶ்ரீதரன்) மகிழ்ச்சியான வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் கண்ணனுக்குத் திருமண வாழ்க்கையில் ஒரு பிரிவு ஏற்படுகிறது. பாபுவின் கள்ளுக்கடைக்கு ரெகுலர் கஸ்டமராக இருக்கிறார் சுனி (செம்பன் வினோத் ஜோஸ்).
திடீரென ஒரு நாள் கள்ளுக்கடையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார் பாபு. பாபுவின் மரணம் கொலையா? தற்கொலையா? என ஆராய்வதற்குக் களத்தில் இறங்குகிறது சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷின் (பேசில் ஜோசப்) படை. பாபு எதற்காகக் கொலை செய்யப்பட்டார், அவரைக் கொலை செய்ததது யார், இக்கொலையில் கண்ணன், சுனி ஆகியோருக்குத் தொடர்பிருக்கிறதா, அவரைக் கொலை செய்ததற்கான நோக்கம் என்ன என வழக்கை விசாரிக்கும் சந்தோஷைப் பின் தொடர்வதே இந்த மலையாளப் படத்தின் கதை.
சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷாக சிறு வயதில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சியில் சிக்கிக் கொண்டு மீள முடியாமல் தவிக்கும் இடங்களிலும், காவல் அதிகாரியாக காமெடிகள் செய்யும் இடங்களிலும் ஜொலிக்கிறார் பேசில் ஜோசப். விசாரணையின்போது மொக்கை வாங்கிப் பிறகு அதைச் சமாளிக்க இவர் கையிலெடுக்கும் சிரிப்பு, கோபம் என அனைத்துமே என்டர்டெயினிங் ரகம் சேட்டா! அப்பாவியாக இருக்கும் செளபின் சாஹிரின் எக்ஸ்பிரஷன்கள் அவ்வளவு நேச்சுரல்!
அதே சமயம் தனக்குள் இருக்கும் ஆதங்கத்தை வெளிக்காட்டும் காட்சியிலும் மிரட்டும் நடிப்பைக் கொடுத்து மேஜிக் செய்கிறார் செளபின் சாஹிர். `எடா மோனோ...' என வழக்கமான வில்லனாக நடைபோடும் செம்பன் வினோத் ஜோஸ் நடிப்பில் குறையேதுமில்லை. சோகம் பாதி, கோபம் பாதி என இரண்டு முகங்களில் களமாடும் சாந்தினி ஶ்ரீதரணும் கவனிக்க வைக்கும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
த்ரில்லர் களத்தில் வழக்கமான எலமென்டுகளுடன் குதித்து கொஞ்சம் டார்க் காமெடியை தூக்கலாகக் கலந்து கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஶ்ரீராஜ் ஶ்ரீனிவாசன். டார்க் காமெடிகளும் கதாபாத்திரங்களின் எக்ஸ்பிரஷன்களுடன் கைகோர்த்து அனைத்து இடங்களிலும் க்ளிக் ஆகி படத்தைக் கலகலப்பாக்கி இருக்கிறது. த்ரில்லராக அனைத்து விஷயங்களையும் சரியாகக் கட்டமைத்து எழுதியிருக்கிறார் இயக்குநர். ஆனால், ப்ளான் செய்த விஷயங்கள் அனைத்தும் திரையில் வெளிப்படாதது ஏமாற்றமே! `Non-liner' கதையை அதன் மீட்டருக்கேற்ப கோர்வையாகக் கொண்டு செல்லாதது ஆங்காங்கே குழப்பங்களையும் ஏற்படுத்துகின்றன.
இதுவே முதல் பாதியின் மைலேஜையும் கொஞ்சம் குறைவாக்குகிறது. 'ரஷோமான் எஃபெக்ட்டில்' (Rashomon effect) ஒவ்வொரு பார்வையில் கதை நகரும்போது, திரைக்கதையில் இருக்கும் சில லூப்ஹோல்ஸ் பல கேள்விகளை அடுக்கடுக்காக எழுப்புகின்றன. இதுமட்டுமல்ல, முக்கிய திருப்பங்களுக்கான காரணங்களைத் தெளிவாகச் சொல்லாமல்விட்டது பெரிய மைனஸ்.
மேலும், உண்மையான கொலையாளி தொடர்பான காட்சிகள் எதார்த்தமாகத் திரைக்கதையில் வராமல், வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்ட உணர்வையே தருகின்றன. அதனால், க்ளைமேக்ஸ் டிவிஸ்ட்டை எளிதில் கணிக்க முடிவதால், இறுதிக்காட்சியில் 'பரபர' மிஸ்ஸிங்! `அவ்வளவு பண்ணியும் மண்ட மேல இருந்த கொண்டையை மறந்துட்டீங்களே!'
பச்சை படர்ந்திருக்கும் நிலப்பரப்பைத் தன்மை மாறாமல் படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சைஜு காளித். முக்கியமாக, இரவுக் காட்சிகளில் செய்திருக்கும் யதார்த்திற்கு நெருக்கமான லைட்டிங்கும் தனியாகக் கவனம் ஈர்க்கிறது. `Non linear' கதையைக் குழம்பாதபடி தொகுக்கத் தவறுகிறது ஷஃபிக் முகமது அலியின் படத்தொகுப்பு.
ஆனால், காட்சிகளை நகர்த்துவதற்கு இவர் பயன்படுத்திய நுட்பங்களெல்லாம் (Transition) தனியாகக் கெத்து காட்டுகின்றன. விஷ்ணு விஜய்யின் பின்னணி இசை படத்தை உயரத் தூக்கி நிறுத்துகிறது. அதிலும் ஆங்கில ராப் பாடல் காட்சியைத் துடிப்புடன் நகர்த்த உதவியிருக்கிறது.
காமெடியுடன் த்ரில்லரையும் சரியாகக் கையாண்டிருந்தால் இந்த ப்ராவின்கூடு கள்ளுக்கடைக்குக் கூட்டம் அலைமோதியிருக்கும்!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...