Rain: `பொங்கல் வரை மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா?’ - பருவமழை குறித்து பாலச்சந்திரன் கொடுத்த அப்டேட்
2024 ஆம் ஆண்டிற்கான பருவமழை குறித்து தென் மண்டல வானிலை ஆய்வாளர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
இதுதொடர்பாகப் பேசிய பாலசந்திரன், “வடகிழக்கு பருவமழை காலத்தில் 6 மாவட்டங்களில் இயல்பை விட கூடுதல் மழை பெய்திருக்கிறது. தென்மேற்கு பருவமழை காலத்தில் 18 சதவிகிதமும், வடகிழக்கு பருவமழை காலத்தில் 33 சதவிகிதமும் இயல்பைவிட அதிக மழை பதிவாகி இருக்கிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் மொத்தமாக 590 மி.மீ. மழை பதிவாகி இருக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 27 சதவிகிதம் அதிகமாக மழை பெய்திருக்கிறது.
டிசம்பர் 11 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் ஆழ்ந்தக் காற்றழுத்தத் தாழ்வு பகுதிக் காரணமாக பரவலாக அதி கனமழையும், மிக கனமழையும் பெய்திருக்கிறது. மாவட்ட அளவில் பார்க்கும் பொழுது தென்மேற்கு பருவமழையின்போது நெல்லையில் கடந்த வருடத்தை விட அதி கனமழை பெய்திருக்கிறது.
அதேபோல 16 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், 17 மாவட்டங்களில் இயல்பையொட்டியும், ஆறு மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் பதிவாகி இருக்கிறது. அதே வடகிழக்கு பருவமழையைப் பொறுத்தவரை நெல்லை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட மிக அதிகமாகவும் 23 மாவட்டங்களில் அதிகமாகவும், 11 மாவட்டங்களில் இயல்பையொட்டியும் மழை பெய்திருக்கிறது.
அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பருவமழை அதிகளவில் பெய்திருக்கிறது. பொங்கல் வரை தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன்பிறகு வட கிழக்கு பருவமழை விலகும்” என்று தெரிவித்திருக்கிறார்.