மதுரை: 9.36 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு! டோக்கன் வ...
Registration: ``ஆவண எழுத்தர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்...'' - அமைச்சர் மூர்த்தி
"வணிக வரித்துறையும், பதிவுத்துறையும் எனக்கு இரண்டு கண்கள்..." என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பேசியுள்ளார்.
மதுரையில் நடந்த பதிவுத்துறை மாநிலப் பணியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பி.மூர்த்தி, "தமிழக அரசுக்கு பதிவுத்துறை மற்றும் வணிக வரித்துறை மூலம் 87 சதவிகிதம் வருவாய் கிடைத்துள்ளது. மற்ற துறைகளை விட நம் துறைதான் அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தருகிறது. நடப்பாண்டில் பதிவுத்துறையில் ரூ. 2 ஆயிரத்து 200 கோடி, வணிக வரித்துறையில் ரூ.10 ஆயிரம் கோடி கூடுதலாக கிடைத்துள்ளது. நடப்பாண்ட்டில் ரூ.24 ஆயிரம் கோடிக்கு வருவாய் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது. வணிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், வணிகவரித்துறையில் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
பதிவுத்துறை அலுவலர்களுக்கு பதவி உயர்வில் உள்ள பிரச்னைகள் களையப்பட்டு பதவி உயர்வு அளிக்கப்படும். பதிவுத்துறையில் சார்ஜ் மெமோ பெறப்பட்ட காரணத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 150 பணியாளர்களுக்கு பதிவுத்துறை செயலாளர் தலைமையிலான குழு விசாரித்து தவறு செய்யாத பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும். ஜனவரி மாதத்துக்குள் 38 உதவி பதிவுத்துறை தலைவர் பணியிடங்கள் நிரப்பப்படும்.
வணிகவரித்துறையில் 20 நாள்களில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. பதிவுத்துறையில் வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பதவி உயர்வு வழங்க இயலவில்லை. அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் பதவி உயர்வு வழங்கப்படும். வணிக வரித்துறையும், பதிவுத்துறையும் எனக்கு இரண்டு கண்கள். பதிவுத்துறை அலுவலர்கள் ஆவண எழுத்தர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும். பதிவுத்துறை அலுவலர்கள் தாங்களாகவே பிரச்னைகளில் மாட்டிக்கொண்டால் நான் பொறுப்பல்ல. அதே நேரம் பதிவுத்துறை அலுவலர்களுக்கு பணியில் பிரச்சனை என்றால் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன்" என்று பேசினார்.