Sachin: நண்பனை சந்தித்த சச்சின்; நெகிழ்ந்த வினோத் காம்ப்ளி! என்ன நடந்தது?
பிரபல கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, சஞ்சய் பங்கர், ரமேஷ் பவார் போன்ற கிரிக்கெட் வீரர்களுக்கு சிறுவயது பயிற்சியாளராக ரமாகாண்ட் அச்ரேக்கர் இருந்திருக்கிறார்.
2019ஆம் ஆண்டு மறைந்த ரமாகாண்ட் அச்ரேக்கருக்கு மும்பையில் நேற்று நினைவுச் சின்னம் திறக்கப்பட்டது. இந்த விழாவில் சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, சஞ்சய் பங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். வினோத் காம்ப்ளி மேடையில் அமர்ந்திருந்ததை பார்த்த சச்சின் டெண்டுல்கர், நேரடியாக அவரிடம் சென்று பேசியிருக்கிறார். அப்போது சச்சினின் கைகளை பிடித்து காம்ப்ளியும் உற்சாகமாக பேசியிருக்கிறார்.
இதன்பின் நடந்த நிகழ்ச்சியில் அச்ரேக்கர்-க்காக பாடல் ஒன்றை பாடி வினோத் காம்ப்ளி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளியிடம் சென்று பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் நேரில் சந்தித்து கொண்ட நிகழ்வு அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
சச்சினின் பள்ளிக்கால நண்பரான வினோத் காம்ப்ளி ஒரு காலத்தில் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக இருந்தார். இவருடைய பள்ளி பருவத்தில் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து அடித்த 664 ரன்கள் பார்ட்னர்ஷிப் அவரை உலக அளவில் பிரபலப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...