பிரதமரின் பயிற்சித் திட்டத்தில் அதியமான் கல்லூரி மாணவி தோ்வு
TVK : 'அமித் ஷாவுக்கே எங்களின் பலம் என்னனு தெரிஞ்சிருக்கு!' - தவெக அருண் ராஜ் பளிச் பேட்டி
சிவகங்கையில் காவலர்களால் சித்ரவதை செய்து கொல்லப்பட்ட அஜித் குமாரின் இறப்புக்கு அரசைக் கண்டித்து தவெக சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. விஜய்தான் முதல்வர் வேட்பாளர், தனித்துதான் போட்டி என தவெக தீர்மானம் நிறைவேற்றிய பிறகும் அமித் ஷா விடுவதாக இல்லை.

திமுகவுக்கு எதிரான சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என தவெகவுக்கும் அழைப்பு விடுக்கிறார் அமித் ஷா. தவெக முகாம் என்ன மனநிலையில் இருக்கிறது என்பதை அறிய அக்கட்சியின் கொள்கைப் பரப்புப் பொதுச்செயலாளர் அருண் ராஜா தொடர்புகொண்டு பேசினோம்.
''அமித் ஷா ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்திருக்கிறார். தவெக பற்றிய கேள்விக்கு, திமுகவை எதிர்க்கும் சக்திகள் ஓரணியில் இணைய வேண்டும் என்பதைப் போல கூறியிருக்கிறார். தவெக பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்த பிறகும், அங்கிருந்து வரும் தொடர் அழைப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்?"
"இது தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சியைத்தான் காட்டுகிறது. தவெகவின் மாநாட்டுக்கு பிறகு மக்களின் மத்தியில் ஒரு எழுச்சி உண்டாகியிருக்கிறது. இளைஞர்களின் மத்தியில் எங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. பெண்கள் எங்களின் கட்சியை நோக்கி பார்வையை திருப்பியிருக்கின்றனர். மக்கள் மாற்றத்துக்கு தயாராக இருக்கின்றனர்.

இதையெல்லாம் உளவுத்துறை மூலமும் சர்வேக்கள் மூலமும் அமித் ஷா அறிந்திருப்பார். அதிமுக - பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணியாக இருக்கிறது. தோல்வி உறுதி என்பது அவர்களுக்கு தெரிகிறது. அதனால்தான் எங்களை இழுக்கப் பார்க்கிறார்கள். ஆனால், நாங்கள் எங்களின் கொள்கை எதிரி பாஜகதான், அவர்களுடன் எப்போதும் கூட்டணி கிடையாது என்பதை உறுதியாக கூறிவிட்டோம்."
"நீங்கள் பாஜகவை கொள்கை எதிரி எனச் சொல்லி கடுமையாக எதிர்க்கிறீர்கள், திமுகவும் அதே பாஜக எதிர்ப்பு மனநிலையில்தான் இருக்கிறது. ஆனால், பாஜக திமுகவை வலுவான எதிரியாக பார்க்கிறது. உங்களை அப்படி பார்க்கவில்லையே. பின்னணியில் என்னதான் நடக்கிறது?"
"இந்தியாவிலேயே பெரிய கட்சி என மார்தட்டிக் கொள்ளும் பாஜக, எங்களை கொள்கை எதிரி எனச் சொல்லி எதிர்க்கட்டும். அதைச் சொல்லி மக்களை சந்திக்கட்டும். அதைவிட்டுவிட்டு திமுக எதிர்ப்பை காரணம் காட்டி எங்களை கூட்டணிக்கு அழைப்பது இந்தியாவிலேயே பெரிய கட்சி என பெருமை பேசிக் கொள்பவர்களுக்கு அழகல்ல."
"பாஜகவுடன் செல்ல விருப்பமில்லை என்பதை புரிந்துகொள்கிறேன். ஆனால், திமுக எதிர்ப்பு வாக்குகளை ஒரணியில் சேர்க்க வேண்டும் என்பதுதான் அமித் ஷா, எடப்பாடி ஆகியோரின் திட்டமாக இருக்கிறது. அப்படி சேர்க்கவில்லையெனில் வாக்குகள் சிதறி மீண்டும் திமுகதான் ஆட்சியைப் பிடிக்கும் என நினைக்கிறார்கள். இதுதான் யதார்த்தம் என நீங்கள் நினைக்கவில்லையா?"
"நிச்சயமாக இல்லை. திமுக பழைய வலுவோடு இல்லை. இந்த ஆட்சியின் மீதான மக்களின் எதிர்ப்பு மனநிலை அதிகரித்திருக்கிறது. அதிமுகவும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 7 இடங்களில் டெபாசிட்டை இழந்தார்கள். மக்கள் ஒரு மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர். நாங்கள் எங்களின் செயல்திட்டங்களை முன் வைத்து மக்களை சந்திக்கப் போகிறோம். 1977 இல் நடந்தது மீண்டும் நடக்கும். வரலாறு திரும்பும்."

"விஜய்தான் முதல்வர் வேட்பாளர். தவெக தலைமையில்தான் கூட்டணி எனக் கூறிவிட்டீர்கள். ஆனால், உங்களை நம்பி எந்தக் கட்சியும் வரவில்லையே. திமுக கூட்டணி அப்படியே இருக்கிறது. அதிமுகவும் பாஜகவோடு சேர்ந்துவிட்டது. பாமகவும் தேமுதிகவும் உங்களை ஒரு ஆப்சனாக பார்ப்பதைப் போல தெரியவில்லை. உங்களை யாருமே நம்பவில்லையா?"
"முதலில் நாங்களே கூட்டணியை நம்பி இல்லை. யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு வரலாம் என்ற நிலையிலும் நாங்கள் இல்லை. கூட்டணிக்கென்று நாங்கள் சில உயர் மதிப்பீடுகளை வைத்திருக்கிறோம். கொள்கை எதிரியையும் அரசியல் எதிரியையும் அடையாளம் காட்டியிருக்கிறோம். அதற்கெல்லாம் ஒப்புக்கொண்டு வருபவர்கள் வரட்டும். இதைப் பற்றி விரிவாகப் பேச இன்னும் நேரமிருக்கிறது."
"தனித்து ஆட்சியைப் பிடிக்க 30% க்கும் மேல் வாக்கு வங்கி வேண்டும். விஜய் கூட வரலாறு படைக்கப் போகிறோம் என கவுண்டவுனையெல்லாம் தொடங்கி வைத்திருக்கிறார். முதல் தேர்தலிலேயே சாதிக்க முடியும் என நினைக்கிறீர்களா?"
"திமுக எதிர்ப்பு வாக்குகள் அதிமுகவுக்கு அப்படியே செல்லவில்லை என்பதை கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே பார்த்துவிட்டோம். திமுக அரசின் மீது நற்மதிப்பு இல்லை. லாக்கப் மரணங்களால் மக்கள் கொந்தளித்திருக்கிறார்கள். போதைப் பொருளின் பயன்பாடு அச்சமூட்டும் வகையில் பெருகியிருக்கிறது. மக்கள் திமுகவையும் அதிமுகவையும் ஒரே தட்டில் வைத்துதான் பார்க்கிறார்கள். எல்லாரும் எங்களுக்கு வாக்களிக்க தயாராகிவிட்டார்கள் என சொல்லமாட்டேன். ஆனால், அதற்கு முந்தைய நிலையை மக்கள் எட்டிவிட்டார்கள். 50 ஆண்டுகளாக இவர்கள் இருவருமே ஆண்டுவிட்டார்கள். ஒரு மாற்றம் வேண்டும் எனும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர்."

"ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் உருவாகும் 'Perception' அந்தத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இன்றைய தேதிக்கு, விஜய் தனித்து நின்றால் கணிசமான வாக்குகளை வாங்குவாரே தவிர ஆட்சியைப் பிடிக்கமாட்டார் என்பதுதானே பொதுவான 'Perception' ஆக இருக்கிறது. இந்த மனவோட்டத்தை குறுகிய காலத்தில் மாற்ற முடியும் என நினைக்கிறீர்களா?"
"கட்சியை தொடங்கிய போது என்ன சொன்னார்கள்? இவர் அவரின் பலத்தை நிரூபிக்காதவர். இவருக்கு என்ன வாக்கு வங்கி இருக்கப்போகிறது என்றுதானே பேசினீர்கள். அதிலிருந்து இப்போது கணிசமான வாக்குகளை எடுப்பார் எனும் நிலை வந்திருக்கிறதல்லவா. இதே மாதிரி எங்களுக்கு சாதகமான மனவோட்டம் நிச்சயமாக ஏற்படும். அதற்காகத்தான் திட்டங்களை தீட்டி உழைத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் எடுத்துப் பார்த்த சர்வேக்களிலேயே நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. அதனால் நிச்சயம் மன மாற்றம் உண்டாகும்."
"விஜய் அரசியலை என்னவாக புரிந்து வைத்திருக்கிறார் என்பதே குழப்பமாக இருக்கிறதே. வெறும் தேர்தல் மட்டும்தான் அரசியல் என நினைக்கிறாரோ. ஏனெனில், கட்சி ஆரம்பித்து இத்தனை நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு இப்போதுதான் ஆக்டிவ் மோடுக்கே வருகிறார். பிரசாரத்துக்காக மட்டும்தான் மக்களை சந்திக்கப் போகிறார். அரசியல் என்பது வெறும் தேர்தல் மட்டும்தானா?"
"நிச்சயமாக இல்லை. திமுக, அதிமுகதான் அப்படியொரு மனநிலையில் இருக்கின்றன. தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கிறது. இப்போதே இரண்டு கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். பயம் இருக்கலாம். ஆனால், அதை வெளியில் காட்டக்கூடாது. இவர்கள் பயத்தையும் பதற்றத்தையும் அப்பட்டமாக வெளிக்காட்டுகிறார்கள். மக்கள் பிரச்சனையை பேச வேண்டிய நேரத்தில் பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

எங்கள் தலைவர் தேர்தலுக்காக மட்டுமே வேலை செய்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஒரு படத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்றார். சொன்னதைப் போல முடித்துவிட்டு களத்துக்கு வந்துவிட்டார். அஜித் குமார் மரணத்தில் திமுகவோ அதிமுகவோ அவர் வீட்டிற்கு சென்று நிற்கவில்லையே. அடுத்தடுத்து போராட்டம், ஆர்ப்பாட்டம், மாநாடு என மக்கள் நலன் சார்ந்து பெரிய பெரிய திட்டங்களை கையில் வைத்திருக்கிறோம்."