ஆன்லைனில் நோ்காணல் நடத்தி வேலை தருவதாக பணமோசடி: 14 போ் கைது!
Ukraine: துருக்கி சென்றடைந்த ஜெலன்ஸ்கி; நேரில் வராத புதின் - அமைதி பேச்சுவார்த்தை பலனளிக்குமா?
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் இன்று துருக்கியில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். இதற்காக துருக்கி சென்றடைந்துள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. ஆனால் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பேச்சுவார்த்தையில் பங்குபெறவில்லை.
புதின் கலந்துகொள்ளாதது உக்ரைனை இழிவுபடுத்துவதாக பார்க்கப்படுவதுடன், ரஷ்யா போரை நிறுத்துவதில் தீவிரமாக இல்லை என மேற்கத்திய நாடுகள் விமர்சித்துள்ளன. புதின் நேரில் கலந்துகொள்வார் என பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கலந்துகொள்ளாததால் உலக தலைவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

"ரஷ்ய அதிகாரிகள் அலங்காரமாகவே செயல்படுவர்" என துருக்கி விமான நிலையத்தில் அளித்த செய்தியாளர் சந்திப்பில் விமர்சித்துள்ளார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. மேலும், துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் உடனான சந்திப்புக்குப் பிறகே அடுத்த பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் குறித்து பேச முடியும் என்றும் கூறியுள்ளார்.
புதினுக்கு பதில் கலந்துகொள்வது யார்?
புதினுக்கு நம்பகமானவரும் வரலாற்று ஆசிரியருமான விளாதிமிர் மெடின்ஸ்கி என்பவரின் தலைமையிலான அணியை அனுப்பியுள்ளது.
மெடின்ஸ்கி பழைமைவாத மற்றும் தேசியவாத நோக்கில் ரஷ்யாவின் வரலாற்றை மறுவரையரை செய்பவர். இவரது வரலாற்று புத்தகங்கள் உக்ரைன் ஒரு நாடாக இருப்பதையே புறக்கணிக்கின்றன.
இவரது பழைமைவாத மற்றும் நாட்டுப்பற்றை ஊட்டும் எழுத்துகளால், புதினுக்கு விருப்பமான அதிகாரியாக உயர்ந்துள்ளார். இவருடன் நான்கு கீழ்நிலை அதிகாரிகளை நிபுணர்கள் என அனுப்பி வைத்துள்ளது ரஷ்யா.

அமைதியின் அத்தியாயம் தொடங்கும் - துருக்கி நம்பிக்கை!
இந்த வார தொடக்கத்தில் ரஷ்ய அதிபர் புதின் நேரில் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சவால் விடுத்திருந்தார் ஜெலன்ஸ்கி. "நான் துருக்கிக்கு செல்கிறேன், புதினின் வருகைக்காக காத்திருப்பேன்" எனப் பேசியிருந்தார். ஆனால் புதின் எப்போதும் நேரில் வருவதாகப் பேசவில்லை.
புதினும் ஜெலன்ஸிகியும் நேரில் சந்தித்து பேச வேண்டும் என அழுத்தம் கொடுத்துவந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "புதின் நேரில் வராதது ஆச்சர்யமளிக்கவில்லை" எனக் கூறியுள்ளார்.
"நான் அங்கு இல்லாதபோது புதின் நேரில் வருவது நடக்காத காரியம்தான்" எனக் கூறியுள்ளார் அதிபர் ட்ரம்ப்.

இந்த பேச்சுவார்த்தை 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் போரின் சொல்லிமாளாத துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் புதிய தொடக்கமாக இருக்கும் என நம்பிக்கைத் தெரிவித்து வருகின்றனர் துருக்கி வெளியுறவுத்துறை அதிகாரிகள்.
ஆனால் புதின் நேரில் வராமல் பேச்சுவார்த்தை மேசையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமரமாட்டார் என உக்ரைன் அதிபர் அலுவலக ஆலோசகர் மிகைலோ பொடோலியாக் கூறியுள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரை பிரநிதிகள் எந்த இடத்தில் சந்தித்துக்கொள்ளப் போகின்றனர், சரியாக எந்த நேரத்தில் பேச்சுவார்த்தைத் தொடங்கும் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
இருநாட்டு அதிபர்கள் கலந்துகொள்ளாத பேச்சுவார்த்தை போரில் அமைதியை எட்டுவதற்கு பயனளிக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாக எழுந்துள்ளது!