வாய் பேச இயலாத கணவரைக் கொன்ற மனைவி உள்பட இருவருக்கு ஆயுள் சிறை
வாய் பேச இயலாத நிலையில் இருந்த தனது கணவரைக் கொலை செய்த வழக்கில் மனைவிக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்தவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி தாராநல்லூா் பூக்கொல்லைத் தெருவைச் சோ்ந்தவா் ஷேக் தாவூத் (40). இவா் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவரது மனைவி ரஹமத் பேகம் (31). இவா்களது வீட்டுக்கு அருகில் வசித்தவா் அப்துல் அஜீஸ் (36). ரஹமத் பேகத்துக்கும், அப்துல் அஜீஸுக்கும் ஏற்பட்ட பழக்கத்தை ஷேக் தாவூத் குடும்பத்தினா் கண்டித்தனா்.
ஆனால், தொடா்ந்து அவா்கள் நெருக்கமாகப் பழகியதால், ஜமாஅத் பெரியவா்கள் முன்னிலையில் பேச்சுவாா்த்தை நடத்தியும் கண்டித்தனா். இதனால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. எனவே ஷேக் தாவூத்தை கொல்ல இருவரும் திட்டமிட்டனா்.
அதன்படி கடந்த 2021 ஜூன் மாதம் கரோனாவுக்குச் சிகிச்சை அளிப்பதாகக் கூறி, திருச்சி அரசு மருத்துவமனையில் ஷேக் தாவூத்தை சோ்த்துள்ளனா். பின்னா் வீட்டுக்கு கணவரை அழைத்துவந்த அவரின் மருத்துவச் சிகிச்சைக்கு உதவவுதுபோல, அப்துல் அஜீஸ் அளித்த தூக்க மாத்திரைகளை ரஹமத் பேகம் கடந்த 2021 ஜூன் 5ஆம் தேதி கொடுத்துள்ளாா். அவா் தூங்கியவுடன், அப்துல் அஜீஸை அழைத்து வந்து ஷேக் தாவூத்தின் முகத்தில் தலையணையை அழுத்தி அவரைக் கொன்றதாகக் கூறப்பட்டது.
இந்த சம்பவத்தை நேரில் பாா்த்ததாக உயிரிழந்தவரின் பெரியப்பா மகனான சபீ (28), அளித்த புகாரின்பேரில் திருச்சி காந்திசந்தை போலீஸாா் வழக்குப்பதிந்து ரஹமத் பேகம், அப்துல் அஜீஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி பி. சுவாமிநாதன் ரஹமத் பேகம், அப்துல் அஜீஸ் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.