Vijay: எட்டமுடியாத பிப்.2 டார்கெட்; மீண்டும் நிர்வாகிகளை சந்திக்கும் விஜய் - பரபர பனையூர் மீட்டிங்
கடந்த 24 ஆம் தேதி சில மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி மாவட்ட செயலாளர்கள் உட்பட முக்கியப் பொறுப்புகளுக்கான நியமன ஆணைகளை விஜய் வழங்கியிருந்தார். மொத்தமாக 19 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து நியமன ஆணைகளை விஜய் வழங்கியிருந்தார். இந்நிலையில், இன்று இரண்டாம் கட்டமாக 19 மாவட்ட நிர்வாகிகளை விஜய் சந்திக்கத் திட்டமிட்டிருக்கிறார். அடுத்தடுத்த சந்திப்புகளை விஜய் நிகழ்த்தினாலும் அவர் நினைத்த டார்கெட்டை எட்ட முடியாததில் கொஞ்சம் அப்செட்டிலும் இருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
வழக்கம்போல இன்றைய சந்திப்புக்கான அழைப்பும் நேற்று மாலையே நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மதுரை, சென்னை, மயிலாடுதுறை, தர்மபுரி, ஈரோடு, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட கிட்டத்தட்ட 19 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்துக்கு வந்திருக்கின்றனர். நிர்வாகிகளைச் சந்திக்க மதியம் 12 மணிக்குள் விஜய் பனையூர் வரவிருக்கிறார். ஒவ்வொரு மாவட்ட நிர்வாகியாக தனித்தனியாக சந்தித்து நியமன ஆணைகளையும் வழங்கவிருக்கிறார். மாலை 5 மணியளவில் இரண்டாம்கட்ட மா.செக்கள் பட்டியல் வெளியாகும் எனவும் தகவல் சொல்கிறார்கள்.
பிப்ரவரி 2 ஆம் தேதி தவெக இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. அதற்கான சிறப்பு விழாவுக்கும் கட்சி அலுவலகத்தில் ஏற்பாடுகள் செய்வதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதற்காகவும் தலைமைக்கு நெருக்கமான சில நிர்வாகிகள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றனர். பிப்ரவரி 2 ஆம் தேதி பெரியார், அம்பேத்கர் உட்பட கொள்கைத் தலைவர்களின் சிலைகளைத் திறந்து வைக்கும் விஜய் சிறப்புரையாற்றவிருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். அதில், பெரியார் சம்பந்தமான சமீபத்திய சர்ச்சைகளுக்குப் பதில்சொல்லும் வகையில் விஜய் பேசக்கூடும் என்றும் தலைமைக்கு நெருக்கமானவர்கள் தகவல் சொல்கின்றனர்.
பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் முழுமையாக மா.செக்களை அறிவிக்க வேண்டும் என விஜய் விரும்பினார். 24 ஆம் தேதிக்கு பிறகு மூன்று நான்கு கட்டங்களாக நிர்வாகிகளைச் சந்தித்து பிப் 2 ஆம் தேதிக்குள் கட்சி ரீதியாகப் பிரித்திருக்கும் 120 மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதுதான் விஜய்யின் திட்டமாக இருந்தது எனச் சொல்கிறார்கள்.
ஆனால், சில இழுபறிகள் காரணமாக பிப்ரவரி 2 ஆம் தேதிக்குள் இரண்டு கட்டமாக மட்டுமே மா.செக்கள் அறிவிப்பு வெளியாகிறது. 2 ஆம் தேதிக்குள் கிட்டத்தட்ட 40-45 மா.செக்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருப்பார்கள். பிப்ரவரி 3 ஆம் தேதிதான் அடுத்தக்கட்ட கூட்டத்தை நடத்தி மூன்றாம் கட்ட மா.செக்கள் பட்டியலை விஜய் வெளியிடுகிறார்.