கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
Vikatan Cartoon Row : `அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது..!’ - Outlook சிறப்புக் கட்டுரை
விகடன் கார்ட்டூன் விவகாரம் தொடர்பாக பிரபல வாராந்திர ஆங்கில இதழான Outlook கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் இந்த சம்பவத்தை விரிவாக அலசியிருக்கிறது. அந்தச் செய்தியின் தமிழாக்கம்...
தமிழில் மிகவும் பிரபலமான பத்திரிக்கைகளில் ஒன்று விகடன். கடந்த 10-ம் தேதி, இந்த பத்திரிகையின் 'விகடன் பிளஸ்' டிஜிட்டல் இதழின் அட்டைப் படத்தில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அருகில் கை - கால்களில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பது போன்ற சித்திரிப்புக் கார்ட்டூன் வெளியானது. பிப்ரவரி 15 அன்று, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, அந்தக் கார்ட்டூனை 'ஆட்சேபனைக்குரிய கார்ட்டூன்' எனக் குறிப்பிட்டு, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், இந்தியப் பத்திரிகை கவுன்சிலிடம் புகார் அளித்தார்.

அதைத் தொடர்ந்து அன்று மாலை, இந்தியப் பத்திரிகை தகவல் பணியகத்தின் அதிகாரிகள் சென்னையில் உள்ள விகடன் அலுவலகத்திற்குச் சென்று, 'விகடன் பிளஸ்' அச்சில் கிடைக்கிறதா என்று விசாரித்தனர். இந்த இதழ் விகடன் குழுமத்தின் டிஜிட்டல் வெளியீடு மட்டுமே எனத் தெளிவுபடுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து விகடன் இணையப்பக்கம் மத்திய அரசால் முடக்கப்பட்டது. இந்த நடவடிக்கை இந்தியப் பத்திரிகையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பல்வேறு அரசியல் செயற்பாட்டாளர்கள், மூத்தப் பத்திரிகையாளர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். அதனால், தற்போது அந்த கார்ட்டூன் இந்தியளவில் பேசுபொருளாகியிருக்கிறது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய விகடன் பத்திரிக்கை ஆசிரியர் முருகன், ``கடந்த சனிக்கிழமை மாலை 7 மணியளவில் விகடன் வலைத்தளம் எதிர்பாராதவிதமாகச் செயலிழந்தது. அதற்குக் காரணம் என்ன என்பதை எங்களால் தீர்மானிக்க முடியவில்லை. சில நெட்வொர்க்குகளில் விகடன் பக்கம் வேலை செய்தது. சிலவற்றில் வேலை செய்யவில்லை. உதாரணமாக, ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகியவற்றில் வேலை செய்யவில்லை. ஆனால் ACT, BSNL போன்ற நெட்வொர்க்கில் வேலை செய்தது.

இதற்கிடையில் தான், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், ``சர்ச்சைக்குரிய கார்ட்டூன் வெளியிட்ட காரணத்தால் உங்களின் பத்திரிக்கையை ஏன் முடக்கக் கூடாது... உங்கள் தரப்பு நியாயத்தைக் கூறுங்கள்" எனத் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடமிருந்து 18-ம் தேதி வரை அவகாசம் அளித்து அறிவிப்பு வந்தது. மிகக் குறுகிய காலமே எங்கள் தரப்பு விளக்கத்துக்கு அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனால், கால அவகாசத்தை இரண்டுநாள் அதிகப்படுத்தக் கேட்டுக்கொண்டோம்.
நேரு, மன்மோகன் சிங், கருணாநிதி, ஸ்டாலின் உள்பட அனைவரையும் விமர்சிக்கும் கார்ட்டூன்களை நாங்கள் வெளியிட்டு வருகிறோம். அமைச்சகத்தின் முடிவு பத்திரிகைக்கு எதிராகச் சென்றால், அதை நீதிமன்றத்தில் எதிர்கொள்வோம். எங்கள் கார்ட்டூனிஸ்ட் தனது பணியைத் தொடர்ந்து செய்வார்." என்றார்.
இந்த கார்ட்டூனின் கர்த்தா கார்ட்டூனிஸ்ட் ஹாசிஃப்கான் (42), 2012 முதல் விகடன் குழுமத்தில் பணியாற்றிவருகிறார். கார்ட்டூன் வரைந்ததற்காக அரசியல்வாதிகள், அவர்களின் ஆதரவாளர்களிடமிருந்து பல்வேறு மிரட்டல்களை எதிர்கொண்டிருக்கிறார். ஆனால், வலதுசாரிகளிடம் இருந்து அவர் எதிர்கொள்ளும் தற்போதைய மிரட்டல்களும், விமர்சனங்களும் அவரின் மதத்தைக் குறிவைத்திருக்கிறது. சமூக ஊடகங்களில் அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக பேசிய ஹாசிஃப்கான், ``தி.மு.க-வை விமர்சிக்கும் கார்ட்டூன் வரைந்தபோதும், ஜெயலலிதாவை விமர்சிக்கும் கார்ட்டூன் வரைந்தபோது இரண்டுக் கட்சி ஆதரவாளர்களும் விமர்சித்திருக்கின்றனர். ஆனால், பிரதமர் மோடி ஆதரவாளர்கள் மோசமாக விமர்சிக்கின்றனர். அரசியல் விமர்சனமோ, சைபர் ட்ரோலிங் செய்வது கூட பரவாயில்லை. ஆனால் ஒருவரை அவரது மத அடையாளத்தை முன்வைத்துத் தாக்குவதும் அதைவைத்து அவர்களைக் கையாள்வதும் மிகவும் ஆபத்தானது." என்றார்.
2026-ம் ஆண்டில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவுள்ள விகடன் குழுமம், கடந்த காலங்களிலும் இதேபோன்ற கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான சவால்களைச் சந்தித்திருக்கிறது. 1987-ம் ஆண்டில், `ஆனந்த விகடனின்’ அப்போதைய ஆசிரியரான எஸ்.பாலசுப்பிரமணியன், வெளியிட்ட ஒரு கார்ட்டூனுக்காக தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புரிமைக் குழு, அவருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதித்தது.
பாலசுப்ரமணியன் சிறையில் அடைக்கப்பட்டாலும், ஊடகங்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, இரண்டு நாள்களுக்குப் பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டமன்றத்தின் முடிவை எதிர்த்து வழக்குத் தொடுத்து, 1994-ல் அந்த வழக்கில் வென்றார். அவருக்கு இழப்பீடாக 1,000 ரூபாய் வழங்கப்பட்டது. அதை ஊடகச் சுதந்திரத்துக்குக் கிடைத்த வெற்றியின் அடையாம் எனக் குறிப்பிட்டு அதை அடையாளச் சின்னமாகவே வடிவமைத்திருக்கிறார்.

இதே போன்றதொரு சம்பவம் 2017-ல், கர்நாடக மாநிலத்தில் நடந்திருக்கிறது. 'ஹாய் பெங்களூரு' பத்திரிகையின் ரவி பெலகெரே, 'யேலஹங்கா வாய்ஸ்' பத்திரிகையின் அனில் ராஜு ஆகிய இரண்டு ஆசிரியர்களும் அவதூறு குற்றச்சாட்டுக்காகச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர். 'ஹாய் பெங்களூரு' காங்கிரஸ் எம்.எல்.ஏ பி.எம். நாகராஜைப் பற்றி அவதூறு செய்தியை வெளியிட்டதாகவும், 'யேலஹங்கா வாய்ஸ்' பா.ஜ.க எம்.எல்.ஏ எஸ்.ஆர். விஸ்வநாத்தைப் பற்றி விமர்சனக் கட்டுரைகளை வெளியிட்டதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.