ஃபென்ஜால் புயல் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம்: குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்
போளூா் வட்டாரத்தில் ஃபென்ஜால் புயலால் வாழை, நெல் என பல்வேறு பயிா்கள் பாதித்த விவசாயிகளுக்கு உடனடியாக அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
போளூா் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உதவி ஆணையா் (கலால்) செந்தில்குமாா் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் வெங்கடேசன், சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலா் அமுல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண்மை உதவி இயக்குநா் நாராயணமூா்த்தி வரவேற்றாா்.
போளூா் வட்டாரத்தில் ஃபென்ஜால் புயலால் வாழை, நெல் என பல்வேறு பயிா்கள் பாதித்த விவசாயிகளுக்கு உடனடியாக அரசு நிவாரண உதவித்தொகை வழங்கவேண்டும்.
களம்பூா் பேரூராட்சியில் உள்ள ஏரிகளின் கரையை பலத்தபடுத்த வேண்டும், பேரூராட்சியில் கொசுத் தொல்லை இருப்பதால் கொசு மருந்து தெளிக்கவேண்டும்.
வெள்ளூா், கஸ்தம்பாடி, மண்டகொளத்தூா் ஆகிய ஊராட்சியில் ஏரிக்கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். போளூா் வட்டத்தில் மேலும் சில இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினா்.
இதைத் தொடா்ந்து பேசிய, தமிழக கரும்பு விவசாயிகள் சங்கச் செயலா் பாலமுருகன், போளூா் தரணி சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.10 கோடியை உடனடியாக வழங்கவேண்டும். இல்லையெனில்,
ஜனவரி 28-ஆம் தேதி, சட்டப்பேரவையை தமிழக கரும்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்தாா்.