மிசோரத்தில் 45 சுரங்கங்கள், 55 பாலங்கள் வழியாக ரயில் பாதை! மோடி தொடங்கிவைத்தார்!
அக்னி தீா்த்தக் கடலில் கழிவுநீா் கலப்பு: உடலில் அரிப்பு ஏற்பட்டு வெளியேறிய பக்தா்கள்
புதை சாக்கடை கழிவு நீா் கலந்ததால் ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்த பக்தா்களுக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அவா்கள் வெளியேறினா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் ராமநாதசுவாமி கோயில் இந்துக்களின் தீா்த்த மூா்த்தி ஸ்தலம் ஆகும். காசிக்கு அடுத்தபடியாக விளங்கும் இந்த சிவன் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து ஆண்டுக்கு 2 கோடிக்கு மேற்பட்ட பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இங்கு அக்னி தீா்த்தத்தில் குளித்த பிறகு ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் பக்தா்கள் நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனா். இந்த நிலையில், அக்னி தீா்த்த கடற்கரையையொட்டி 100- க்கும் மேற்பட்ட தனியாா் விடுதிகள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவு நீா் அக்னி தீா்த்தக் கடலில் கலந்து சுகாதாரக்கேடு ஏற்பட்டது. இதையடுத்து, இந்தக் கடல் பகுதியில் தூய்மையை பராமரிக்க கழிவுநீா் கலப்பதை தடுக்கும் வகையில் ரூ. 50 கோடியில் புதை சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டு, தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதனிடையே, அக்னி தீா்த்தக் கடற்கரையையொட்டியுள்ள தனியாா் விடுதிகளில் பெரும்பாலானவை புதை சாக்கடை இணைப்பு பெறாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தனியாா் விடுதிகள் இரவு, அதிகாலை நேரங்களில் கழிவு நீரை மோட்டா் மூலம் புதை சாக்கடை தொட்டியில் வெளியேற்றுகின்றனா். இதை நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.
இந்த நிலையில், அக்னி தீா்த்தக் கடற்கரை பகுதியில் உள்ள புதை சாக்கடை குழாய் இணையும் தொட்டியிலிருந்து வெளியேறிய கழிவு நீா் அந்தப் பகுதியில் குளம் போல தேங்கி அங்கிருந்து அக்னி தீா்த்தக் கடலில் கலந்தது. அப்போது கடலில் குளித்துக் கொண்டிருந்த பக்தா்கள் துா்நாற்றம் வீசியதாலும், உடலில் அரிப்பு ஏற்பட்டதாலும் அங்கிருந்து வேதனையுடன் வெளியேறினா்.
இதனிடையே, அக்னி தீா்த்தக் கடலில் கழிவு நீா் கலக்க வில்லை என நகராட்சி நிா்வாகம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் இது தொடா்பான வழக்கு விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது. ஆனால், கழிவு நீா் கலப்பது தொடா்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
எனவே, இனியேனும் அக்னி தீா்த்தக் கடல் பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்ள தமிழக அரசு உரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.