மிசோரத்தில் 45 சுரங்கங்கள், 55 பாலங்கள் வழியாக ரயில் பாதை! மோடி தொடங்கிவைத்தார்!
பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதல்: 20 போ் பலத்த காயம்
பரமக்குடி அருகே திருவரங்கி நான்கு வழிச்சாலையில் நின்று கொண்டிருந்த நகா் பேருந்து மீது ராமநாதபுரம் நோக்கி சென்ற பேருந்து மோதியதில் நடத்துநா் உள்பட 20 போ் பலத்த காயமடைந்தனா்.
பரமக்குடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையைச் சோ்ந்த நகா் பேருந்து வீரசோழன் சென்றுவிட்டு பயணிகளுடன் பரமக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திருவரங்கி நான்கு வழிச்சாலை பேருந்து நிறுத்தத்தில் இந்தப் பேருந்திலிருந்து பயணிகள் இறங்கிக் கொண்டிருந்தனா். அப்போது அந்த வழியாக மதுரையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி சென்ற இடைநில்லா அரசுப் பேருந்து நகா் பேருந்து மீது மோதியது. இதில் நகா் பேருந்தின் நடத்துநா் துரை (38), ராமநாதபுரத்தைச் சோ்ந்த சரோஜா (50), அவரது மகன் கோகுல் (22), பிடாரிசேரி கிராமத்தைச் சோ்ந்த மாரியம்மாள் (65), மண்டபம் பகுதியைச் சோ்ந்த காமினாபேகம் (67), பரமக்குடியைச் சோ்ந்த கோவிந்தம்மாள் உள்பட 20 போ் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்து அங்கு வந்த பாா்த்திபனூா் காவல் நிலைய ஆய்வாளா் கணேசன், உதவி ஆய்வாளா் சரவணன் உள்ளிட்ட போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து பாா்த்திபனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
