நேபாளத்தில் புதிய வகை கரோனா பரவல்! 7 நாள்களில் 35 பேர் பாதிப்பு!
`அசத்தும் செல்வா - யுவன் கூட்டணி, '7ஜி ரெயின்போ காலனி 2' டீசர்' - ஹீரோ அண்ணன் சொல்லும் அப்டேட்
காதலுக்காகவும், இதயத்தை இதமாக்கும் பாடல்களுக்காகவும் கொண்டாடப்பட்ட படம் '7ஜி ரெயின்போ காலனி'. கடந்த 2004ம் ஆண்டு வெளியானது. படத்தின் இயக்குநர் செல்வராகவனுக்கு 'நிஜ உலகத்தை நெருங்கிப் பார்த்து படமெடுக்க வந்திருக்கும் தமிழ் சினிமா இயக்குநர்களின் தரமான பட்டியலில் இவரும் இடம் பிடிக்கிறார்' என்று பாராட்டுக்கள் குவிந்த படம் இது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வேகமாக உருவாகி வருகிறது.

'7ஜி ரெயின்போ காலனி 2'
முதல் பாகத்தில் ரவிகிருஷ்ணா, சோனியா அகர்வால், சுமன் ஷெட்டி, மனோரமா, விஜயன், சுதா என பலரும் நடித்திருக்கிறார்கள். சென்னையின் அடுக்குமாடிக் குடியிருப்பில் நடக்கிற காதல் கதை தான் படத்தின் ஒன்லைன். சராசரி இளைஞனின் விடலைத்தனம்தான் கதையின் அடித்தளம். உடல் அழிந்தாலும் உணர்வுகள் அழிவதில்லை என்பதையும், காதல் தோல்விகள் தற்கொலையில் முடியக்கூடாது என்பதையும் அழுத்தமாக வலியுறுத்திய கதை இது.

இந்நிலையில் 21 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் பாகம் உருவாகிறது. முதல் பாகத்தை தயாரித்த நிறுவனமே இரண்டாம் பாகத்தையும் தயாரித்து வருகிறது. ரவிகிருஷ்ணா, மீண்டும் ஹீரோவாக நடிக்க. ஹீரோயினாக அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். மலையாளத்தில் 'ரெக்கசித்திரம்', 'நெரு' 'குருவாயூர் அம்பலநடையில்' என கவனம் ஈர்த்த பல படங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த ஏப்ரல் மாத்தில் கூட '7ஜி'யின் பார்ட் 2 க்கான அப்டேட்டை சொல்லியிருந்தார் செல்வா. யுவன் இசையில் ஶ்ரீநிதி ஶ்ரீபிரகாஷ் அழகான குரலில் ஒரு பாடல் பாடியுள்ளார் என்றார். இந்த படத்தின் பிரேக்கில் தான் ஜி.வி.பிரகாஷை வைத்து 'மென்டல் மனதில்' என்ற படத்தை இயக்கி வந்தார் செல்வா.
இந்நிலையில் '7ஜி' ஹீரோ ரவி கிருஷ்ணாவின் அண்ணனும், பவன் கல்யாண் நடித்த பான் இந்திய படமான 'ஹரஹர வீர மல்லு'வின் இயக்குநருமான ஜோதி கிருஷ்ணாவிட தம்பி நடிக்கும் படத்தின் அப்டேட்டை கேட்டோம்.

'7ஜி ரெயின்போ காலனி' யின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகமும் ரெடியாகிட்டிருக்கு. ரவி இப்பவும் அப்படியே தான் இருக்கார். எந்த மாற்றமும் இல்லை. நடிகர்கள், தொழில் நுட்ப டீம் என பெரும்பகுதினர் முதல் பாகத்தில் உள்ளவர்களே நடிப்பது கதைக்கு இன்னும் பலம் சேர்க்கும். இதுவரை 50 சதவிகித படப்பிடிப்பு நிறைவடைஞ்சிருக்கு. '7ஜி'யில் எல்லா பாடல்களும் எவர்க்ரீன் ரகம். இதிலும் யுவன் ஷங்கர் ராஜா தான் இசை. மூணு பாடல்கள் ரொம்ப பிரமாதமாக போட்டு கொடுத்திருக்கார். அதே டீம், அதே ஃபீல், அதே எமோஷன்ஸ் இதிலும் கனெக்ட் ஆகும். படத்தோட டீசரை முதலில் வெளியிட திட்டமிட்டிருக்கோம். '' என்கிறார் ஜோதி கிருஷ்ணா.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...