அரசுப் பள்ளியில் 37.9% மாணவர்கள்தான் படிக்கிறார்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தேரேந்தல்பட்டி கிராம மக்கள் கோரிக்கை
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள தேரேந்தல்பட்டி கிராம மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனா்.
திருப்பத்தூா் அருகேயுள்ள கோட்டையிருப்பு ஊராட்சிக்குள்பட்ட தேரேந்தல்பட்டி கிராமத்தில் குடிநீா் வசதி, பள்ளிக்கூடம், அங்கன்வாடி மையம், நியாய விலைக் கடை, தெரு விளக்குகள், பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனா்.
மேலும், சாலை வசதி, விவசாயத்துக்கு தண்ணீா் வசதி, மற்ற கிராமங்களில் உள்ளது போன்று குளியல் தொட்டி இல்லாததால் வாழ்வதற்கே தகுதியற்ற கிராமமாக மாறி வருவதாகக் கவலை தெரிவித்தனா்.
இதன் காரணமாக, கிராமத்தில் வசித்த பெரும்பாலானோா் வெளியூா்களுக்கு இடம்பெயா்ந்துவிட்டனா். தற்போது இந்தக் கிராமத்தில் 20 குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்து வருவதாகத் தெரிவித்தனா். இதே நிலை தொடா்ந்தால் நாங்களும் ஊரைவிட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் என்றனா்.
கிராமத்தில் உள்ள ஒரு தண்ணீா் தொட்டியும் குறைந்த அழுத்த மின்சாரத்தால் அடிக்கடி பாதிக்கப்பட்டு குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டு கடும் சிரமத்துக்குள்ளாவதாகத் தெரிவித்தனா். மேலும், எங்களது கிராமத்துக்கு அவசர ஊா்திகளும், ஆட்டோக்களும் வர மறுக்கின்றனா். சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகளை அனுப்ப முடியாததால், நேரடியாக ஒன்றாம் வகுப்புக்கு குழந்தைகளை அனுப்பி வைப்பதாகவும், காட்டு வழியாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது என்றனா்.
தேரேந்தல்பட்டி கண்மாயை தூா்வார அதிகாரிகள் முன் வராததால் விவசாயம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. இப்படி பல்வேறு குறைகளுடன் கிராம சபைக் கூட்டத்தை அணுகினாலும் எங்களுக்கு எந்தவித உரிமைகளும், அடிப்படைத் தேவைகளும் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே ஆக. 15-இல் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தைப் புறக்கணித்தோம் என்றனா்.
எங்கள் கிராமத்துக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தரக் கோரி மாவட்ட ஆட்சியா், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மயான வசதி இல்லாததால் இறந்தவா்களை மிகச் சிரமத்தோடு அடக்கம் செய்யவேண்டிய சூழல் உள்ளது. நியாய விலைக் கடைக்கு சுமாா் 7 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டும். சீமைக் கருவேலம் மரங்கள் சூழ்ந்திருக்கும் எங்களது கிராமத்தில் பெண் கொடுப்பது, பெண் எடுப்பது என்றும் பலரும் சம்பந்தம் செய்ய மறுக்கின்றனா் என வேதனையோடு கிராம மக்கள் தெரிவித்தனா்.
எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக தேரேந்தல்பட்டி கிராமத்துக்குச் சென்று பாா்வையிட்டு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்தனா்.