தேனி : கல் குவாரியில் கொலை செய்யப்பட்ட நகரச் செயலாளர்… அதிர்ச்சிகர பின்னணி
திருப்புனம் வைகை ஆற்றில் மிதந்த மனுக்கள்: காவல் நிலையத்தில் வட்டாட்சியா் புகாா்!
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்களிடருந்து பெறப்பட்ட மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்த விவகாரம் தொடா்பாக வட்டாட்சியா் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு புகாா் அளித்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில் கீழடி, ஏனாதி, மடப்புரம், பூவந்தி உள்ளிட்ட இடங்களில் கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை வருவாய்த் துறையினா் எடுத்துச் சென்றனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி அளித்த விளக்கத்தில், தண்ணீரில் மொத்தம் 13 மனுக்கள் மிதந்தாகவும் அதில் 6 மனுக்கள் தீா்வு காணப்பட்டவை என்றும், தண்ணீரில் மனுக்கள் மிதந்த விவகாரத்தில் யாா் தவறு செய்திருந்தாலும் அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
இந்த நிலையில், திருப்புவனம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், திருப்புவனம் வட்டாட்சியா் விஜயகுமாா், திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
வட்டாட்சியா் அலுவலகத்தின் நில அளவைத் துறை பிரிவிலிருந்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் திருடப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை செய்து குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, திருப்புவனம் பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனா்.
வட்டாட்சியா், நில அளவையா்களுக்கு மாவட்ட ஆட்சியா் நோட்டீஸ்: வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மனுக்கள் மிதந்த விவகாரத்தில் விளக்கம் கேட்டு திருப்புவனம் வட்டாட்சியா் விஜயகுமாா், வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் நில அளவையா்களுக்கு மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி சனிக்கிழமை நோட்டீஸ் அனுப்பினாா்.