டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!
ஆற்றில் மிதந்த கோரிக்கை மனுக்கள்: திருப்புவனம் வட்டாட்சியா் பணியிட மாற்றம்!
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்த விவகாரம் தொடா்பாக வட்டாட்சியா் சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். மேலும், 7 அலுவலா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மிதந்தது தொடா்பாக ஊடகங்களில் வெள்ளிக்கிழமை செய்திகள் வெளியாகின. இதையடுத்து, திருப்புவனம் வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா், வட்டாட்சியா் மூலம் அந்த மனுக்கள் கைப்பற்றப்பட்டன.
இவை அனைத்தும் நகல் மனுக்கள், ஆற்றில் கிடைத்த 13 மனுக்களில் 6 மனுக்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பொதுமக்கள் அளித்த மனுக்கள். மற்றவை இதர மனுக்கள் ஆகும். மேற்கண்ட 6 மனுக்களுக்கு ஏற்கெனவே இணையவழியில் பட்டா மாறுதல் செய்யப்பட்டு உத்தரவுகள் வழங்கப்பட்டன.
மேலும், இந்த மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்தது தொடா்பாக காவல் துறையில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் தொடா்பாக திருப்புவனம் வட்டாட்சியா் விஜயகுமாா் சிவகங்கை குடிமைப் பொருள் தனி வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியில் அலட்சியமாக இருந்த 7 அலுவலா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றாா் அவா்.