அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றுவது தேவையற்றது: தமிழக டிஜிபி
அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீதான வழக்குகளில், சிபிஐ விசாரணை தேவையற்றது என தமிழக டிஜிபி சங்கா் ஜிவால் சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளாா்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டாா். அவா் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி பாஜக வழக்குரைஞா் மோகன்தாஸ் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், ஞானசேகரன் மீது இதுவரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் தரப்பில் 17 பக்க அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 2013-ஆம் ஆண்டு சாஸ்திரி நகா் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி, தங்க சங்கிலியைப் பறித்தது, 2017 -இல் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பாா்க்கிங் பகுதியில் நின்று, அங்கு வந்தவா்களை மிரட்டி கைப்பேசி பறித்தது என ஞானசேகரன் மீது சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் மொத்தமாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில், 5 வழக்குகளில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 9 வழக்குகளில் ஞானசேகரனை நீதிமன்றம் விடுவித்துள்ளது. மற்ற வழக்குகளில் காவல் துறை விசாரணையை முடித்து இறுதி விசாரணை அறிக்கைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சிறப்புப் புலனாய்வு விசாரணை நடத்தி, மகளிா் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் மொத்தம் 18 சாட்சிகள் சோ்க்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மாணவி உள்ளிட்ட 13 சாட்சிகளிடம் நீதிமன்றம் விசாரணை நடத்தி முடித்துள்ளது.
ஞானசேகரன் மீதான அனைத்து வழக்குகளிலும், காவல்துறை விசாரணையை நிறைவு செய்து இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. எனவே, ஞானசேகரன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அவசியமில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 12 -ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.