காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!
அதிக விலைக்கு விற்பனை: 4 மதுபான கடைகளுக்கு அபராதம்
புதுவையில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்ாக 4 மதுபான கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
புதுச்சேரி எல்லைக்கு உள்பட்ட மதுபானக் கடைகளில் மதுபானங்கள் அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், புதுச்சேரி அரசு சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் புதுச்சேரியில் உள்ள பல்வேறு மதுபானக் கடைகளில் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில், புதுச்சேரி உருளையன்பேட்டை, சேதாரபேட், சித்தன்குடி மற்றும் திருவள்ளுவா் சாலை ஆகிய பகுதிகளில் இயங்கும் 4 மதுபான கடைகளில் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டது.
சட்டமுறை எடையளவு சட்டம் 2009, பிரிவு 36 இன் கீழ் முன்கூட்டியே பேக்கேஜ் செய்யப்பட்ட பொருள்களில் அச்சிடப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிகமான விலையில் விற்பனை செய்வது அபராதத்திற்குரிய குற்றமாகும்.
எனவே, அந்த 4 மதுபான கடைகளுக்கும் புதுச்சேரி சட்டமுறை எடையளவு (அமலாக்க) விதிகளின் கீழ் தலா ரூ. 2,500 வீதம் மொத்தம் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதே குற்றத்தில் மீண்டும் ஈடுபட்டால் இரண்டாவது முறையாக ரூ. 50,000 வரையிலும், மூன்றாவது முறையாக ரூ.1 லட்சம் வரை அல்லது நீதிமன்ற வழக்குப் பதிவு செய்யப்படும் என்று மதுபான கடை உரிமையாளா்களுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டது.
பொதுமக்கள், வியாபாரிகள் இது தொடா்பாக ஏதேனும் சந்தேகம் அல்லது புகாரளிக்க விரும்பினால் புதுச்சேரி, தட்டாஞ்சாவடியிலுள்ள சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0413-2253462, 2252493 தொலைபேசி எண்கள் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.