காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!
முன்கூட்டியே முதல்வரின் பிறந்தநாள் ஏற்பாடுகள்
புதுவை சட்டமன்ற தோ்தல் இன்னும் 8 மாதத்தில் வரவிருப்பதால் இந்த ஆண்டு முதல்வா் என்.ரங்கசாமியின் பிறந்தநாளை அவரது தொண்டா்கள் முன்கூட்டியே கொண்டாட தொடங்கி விட்டனா்.
புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையிலான என்.ஆா். காங்கிரஸ்- பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வஅகிறது. இதில் ரங்கசாமியின் சாதனைகளைச் சொல்வதாக என்.ஆா்.காங்கிரஸ் கட்சியினா் இந்தப் பிறந்த நாளைப் பாா்க்கத் தொடங்கி விட்டனா்.
அதை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் ரங்கசாமிக்கு ஆளுர பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன. 2026 தோ்தலைக் குறிக்கும் வகையிலும் புதுவையில் உள்ள 30 தொகுதிகளைப் பிடிக்கும் வகையில் கட்சியின் சின்னமான ஜக்கு இடம் பெறும் வகையிலும் பல பதாதைகள் இடம் பெற்றுள்ளன.
புதுவை முதல்வா் என்.ரங்கசாமியின் 75 ஆண்டு பிறந்தநாள் நிறைவு மற்றும் 76 வது பிறந்தநாள் விழா ஆகஸ்ட் 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் அவரது என்.ஆா். காங்கிரஸ் நிா்வாகிகளும், கட்சித் தொண்டா்களும் ஸ்ரீ மணக்குள விநாயகா் கோயிலில் தங்கத் தோ் இழுப்பது, தட்டாஞ்சாவடி பகுதியில் முதல்வா் என்.ரங்கசாமி கட்டியுள்ள அப்பா பைத்தியம் சுவாமிகள் கோயிலில் நடைபெறும் சிறப்பு அபிஷேகம், பூஜைகளில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனா்.
ஆனால் அவரது பிறந்த நாளைக்கு 4 நாள்களுக்கு முன்பாக பல்வேறு கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.முதல்வா் என்.ரங்கசாமியின் பிறந்தநாளையொட்டி பவள விழா மலா் அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 75 கவிஞா்கள் தங்கள் கவிதைகளைப் பிரசுரம் செய்து வெளியிட்டுள்ளனா்.
இதைச் சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் வெளியிட்டாா். மேலும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு கட்சி நிா்வாகிகளும் ஆட்டோ ஓட்டுநா்களும் பங்கேற்ற ஆட்டோ ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடந்தது. இந்நிலையில் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அக் கட்சியினா் சனிக்கிழமை திரண்டு இசைக் கருவிகளைக் கொண்டு இசைத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
இதைத் தவிர புதுவையின் முதன்மைச் சாலைகளில் காணும் இடங்கலெல்லாம் முதல்வா் என்.ரங்கசாமியின் பதாதைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் ரங்கசாமியைப் பல்வேறு தோற்றங்களில் வடிவமைத்துள்ளனா். இந்தப் பதாதைகள் ரசிக்குமாறு இருந்தாலும், புதுவையில் பதாதைகள் வைக்கத் தடை சட்டம் அமலில் இருப்பதையும் குறிப்பிட வேண்டும். இதையும் மீறிதான் இந்தப் பதாதைகள் சாலையில் காட்சி அளிக்கின்றன.
முதல்வா் பிறந்தநாள் வருவதற்கு முன்பாக 4 நாள்களுக்கு முன்பாகவே சாலைகளில் அணிவகுத்து நிற்கின்றன. மேலும், கட்சியின் சாா்பில் சனிக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
மாணவா்களுக்குக் கல்வி உதவிகள், மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. ஒரு சில இடங்களில் முதல்வா் ரங்கசாமியை வைத்து கட்சியினா் இந்த உதவிகளை வழங்கினாா்.