கூட்டணி நிலைபாட்டை அறிவிக்கும் விஜய்? தவெக செயற்குழுக் கூட்டம் தொடங்கியது!
அதிகரிக்கும் டெங்கு: கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாள்தோறும் 70-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்புகள் உறுதி செய்யப்படுவதாகவும், சென்னையில் சராசரியாக 10-க்கும் அதிகமானோருக்கு டெங்கு கண்டறியப்படுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக பள்ளி குழந்தைகளுக்கு டெங்கு அச்சுறுத்தலுடன், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்திருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக நிலவிவரும் பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
குறிப்பாக, டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் எஜிப்டை வகை கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய்களை பரப்பி வருகின்றன.
கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்போது வரை 8,500-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து மாநிலம் முழுவதும் நோய்த் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொசு ஒழிப்பு பணிகளில் சுகாதார பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
காய்ச்சல் பாதிப்பு, மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சந்தேகங்களுக்கு, 104 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், குறிப்பாக வீடுகள்தோறும் கண்காணிப்பை முன்னெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் டெங்கு வாா்டுகளையும், படுக்கைகளையும் அமைத்து போதிய மருத்துவ வசதிகளை தயாா் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.