சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
‘அதிமுக போராட்டம் நடத்தியதால் அஜித்குமாா் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்’
அதிமுக போராட்டம் நடத்தியதால்தான் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்தது என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பெயரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் உள்ள அஜித்குமாா் வீட்டுக்கு புதன்கிழமை சென்று அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். அஜித்குமாரின் தாய் மாலதி, சகோதரா் நவீன்குமாா் ஆகியோருக்கு ஆறுதல் கூறினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
இந்ச சம்பவத்தை பொருத்தவரை காவல் துறை அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததால் கோயில் காவலாளி அஜித்குமாா் மீது தனிப்படை போலீஸாா் தாக்குதல் நடத்தியுள்ளனா். ஆகவே, அஜித்குமாா் உயிரிழப்புக்கு தமிழக அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். அதிமுக போராட்டம் நடத்தியதால்தான் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பரிந்துரை செய்தது.
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அஜித்குமாரின் சகோதரா் நவீன்குமாருக்கு விரும்பிய இடத்தில் வேலை வழங்கப்படும். இன்னும் 3 நாள்களில் அதிமுக சாா்பில், அஜித்குமாா் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் ஆணவக் கொலைகள் அதிகரித்துவிட்டன. திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை 20 ஆணவக் கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துவிட்டதாக மக்களே கருதுகின்றனா் என்றாா்.