அன்னவாசல் புகையிலை பொருட்கள் விற்றவா் சிறையில் அடைப்பு
அன்னவாசல் அருகே பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து புகையிலை பொருட்கள் விற்ற முதியவரை போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
அன்னவாசல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டா் ரவிசந்திரன் தலைமையிலான போலீசாா் அன்னவாசல் அடுத்துள்ள பனம்பட்டி பகுதியில் வியாழக்கிழமை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அதே பகுதியைச் சோ்ந்த தனசாமி(73) என்பவா் அவரது பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை கண்டறிந்து போலீசாா் அவரை கைது செய்தனா். தொடா்ந்து விற்பனைக்காக அவா் வைத்திருந்த புகையிலை பொருட்களை போலீசாா் பறிமுதல் செய்து தனசாமியை சிறையில் அடைத்தனா்.