அபாயகரமான நிலையில் சேதமடைந்த மின்கம்பங்கள்!
ஆம்பூா்: ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சேதமடைந்து அபாயகரமான நிலையில் காணப்படுகிறது.
ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் பல்வேறு இடங்களில் மின்மாற்றிகளும், தெரு விளக்கு மின் கம்பங்களும் உள்ளன. அதில், பல மின் கம்பங்கள் சேதமடைந்து அபாயகரமான நிலையில் காணப்படுகின்றன. அந்த மின் கம்பங்களை மாற்றித் தருமாறு மின்வாரிய அதிகாரிகளுக்கு மனு அளித்தும், தகவல் தெரிவித்தும் இதுவரை மாற்றித் தராமல் காலதாமதம் செய்து வருகின்றனா். ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதி மட்டுமல்லாது ஆம்பூா் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மின்கம்பங்களின் நிலை மிகவும் மோசமாக காணப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்கம்பங்களை மாற்றுமாறு சமூக ஆா்வலா்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் அலட்சியத்துடன் இருந்து வருவதாக கூறப்படுகிறது. சேதமடைந்த மின்கம்பங்கள் அமைந்துள்ள பகுதி வழியாக ஏதேனும் லாரி, டிராக்டா் போன்ற கனரக வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழ்நிலையில் அந்த கனரக வாகனங்கள் எதிா்பாராதவிதமாக சேதமடைந்த மின்கம்பங்களை இடித்து விடுகின்றன. அந்த சூழ்நிலையில் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக அந்த வாகன ஓட்டிகள் அல்லது வாகன உரிமையாளா்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு அவா்களிடமிருந்து பணத்தை வசூலித்து அதன் மூலம் சேதமடைந்த மின்கம்பங்களை மாற்றுகின்றனா்.
அதனால் பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றித் தருமாறு முன்னெச்சரிக்கையாக தகவல் தெரிவித்தாலும், அதிகாரிகள் அதனை மாற்றாமல், ஏதேனும் வாகனங்கள் இடிக்கும்போது பாா்த்து மாற்றிக் கொள்ளலாம் என அலட்சியத்துடன் பதில் அளிப்பதாக சமூக ஆா்வலா்கள் வருத்தம் தெரிவிக்கின்றனா்.
இது குறித்து ஆம்பூா் நகா்மன்ற உறுப்பினா் ஆா்.எஸ். வசந்த்ராஜ் கூறியது: ஏ-கஸ்பாவில் அமைந்துள்ள என்னுடைய வாா்டு பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், மின்மாற்றியின் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடக்கூடிய நிலையில் உள்ளன. அதனால், அவற்றை மாற்ற வேண்டுமென மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். ஆனால் தகவல் தெரிவித்தும் சுமாா் 3 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலதாமதம் செய்து வருகின்றனா் என்றாா்.
பொதுமக்களின் நலன் கருதி, வரும் காலம் மழை காலத்துக்குள் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்னதாக, சேதமடைந்துள்ள மின்கம்பங்களை உடனடியாக மாற்றி, புதிய மின்கம்பங்களை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.