ஹாலிவுட்டில் அறிமுகமாகும் கங்கனா ரணாவத்..! குவியும் வாழ்த்துகள்!
அபிராமி அம்மன் திருக்கல்யாணம்
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாண நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் ஞானம்பிகை உடனமா் காளஹஸ்தீஸ்வரா் கோயில், அபிராமி அம்மன் உடனமா் பத்மகிரீஸ்வரா் கோயில் சித்திரைப் பெருவிழா ஆண்டுதோறும் 12 நாள்கள் நடைபெறுகிறது. இதன்படி, நிகழாண்டுக்கானத் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த ஏப்.29-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, தினந்தோறும் மாலை சிம்மம், கமலம், அன்னம், யாழி, காமதேனு, பொன்மான் வாகனங்களில் அம்பாளுடன் சுவாமி எழுந்தருளி வீதியுலா சென்று அருள்பாலித்தனா். 9-ஆம் நாள் திருவிழாவையொட்டி, அம்பாள் திக்விஜயம் செல்லும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, மூலவா் காளஹஸ்தீஸ்வரா், ஞானாம்பிகை, பத்மகிரீஸ்வரா், அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, நடராஜருக்கு சிறப்பு அபிஷஷேகம், ஆராதனை நடைபெற்றது.
சுவாமி, பிரியாவிடையுடன் மேடையில் எழுந்தருளிய பின், திருமணச் சடங்குகள், பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, சுவாமி, அம்பாளின் பிரதிநிதிகளான பட்டா்கள் காப்புக் கட்டிக் கொண்டனா். மாங்கல்ய பூஜையைத் தொடா்ந்து, பிரதிநிதிகளான பட்டா்கள் மாலை மாற்றிக் கொண்டனா். பின்னா், அபிராமி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, இரவு பூப்பல்லக்கில் சுவாமி அம்பாள் திருவீதியுலா நடைபெற்றது.