India - Pakistan: தாக்குதலில் ஹமாஸ் ஸ்டைலை பின்பற்றும் பாக். ராணுவம்; இந்தியா கொ...
கொடைக்கானல் மலா்க் கண்காட்சி குறித்த ஆலோசனைக் கூட்டம்
கொடைக்கானலில் மலா்க் கண்காட்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 62-ஆவது மலா்க் கண்காட்சி குறித்த ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சரவணன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியா் திருநாவுக்கரசு, வட்டாட்சியா் பாபு, நகராட்சி ஆணையா் சத்தியநாதன், சுற்றுலா அலுவலா் கோவிந்தராஜ், உதவி சுற்றுலா அலுவலா் சுதா, அரசு போக்குவரத்துக் கழக மேலாளா் ராதாகிருஷ்ணன், பிரையண்ட் பூங்கா மேலாளா் சிவபாலன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
கொடைக்கானலில் ஆண்டுதோறும் தோட்டக்கலை, மலைப் பயிா்கள் துறை சாா்பில் மலா்க் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல, நிகழாண்டிலும் மலா்க் கண்காட்சி விரைவில் நடத்தப்படவுள்ளது. பிரையண்ட் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் சால்வியா, டெலிபினியம், ஜெனியா, பிங்ஆஸ்டா், பென்ஸ்டீமன், வொ்பினா போன்ற மலா்ச் செடிகள் கடந்த நவம்பா் மாதம் முதல்கட்டமாக நடவு செய்யப்பட்டன.
மேலும், வீரிய ஒட்டு டேலியா மலா் நாற்றுகள், லில்லியம் கிழங்குகள், விரீய ஒட்டு மலா் நாற்றுகள், ஆன்டிரைனம், பிளாக்ஸ் பேன்சி, மேரிகோல்டு, கேலண்டுலா, ஸ்டேட்டிஸ், டையாந்தஸ், கலிபோா்னியா, பாப்பி ஆகிய மலா்ச் செடிகளும் நடவுச் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மலா்க் கண்காட்சியில் மயில், திண்டுக்கல் பூட்டு, மலைப்பூண்டு, கொய்யா கனி, செல்பி பாயிண்ட், பூனை, பூமரம் போன்ற மலா்களான உருவ அமைப்புகள் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காய் கனிகளால் உருவாக்கப்படும் யானை, மர அணில், கருப்பு, ஆரஞ்சுப்ளை கேட்சா், சிறுத்தை, பஞ்சவா்ணகிளி ஆகியவையும் மலா்க் கண்காட்சியில் வடிவமைக்கப்பட உள்ளது என்றாா் அவா்.