தம்பதியை கத்தியால் குத்திய இளைஞா் கைது: ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு 15 இடங்களில் கத்த...
அமலாக்கத் துறை அதிகாரி என்ற பெயரில் பணம் கேட்டு மிரட்டியவா் கைது
அமலாக்கத் துறையின் மூத்த அதிகாரி என்ற பெயரில் மக்களை மிரட்டி பணம் பறித்து வந்த குருகிராமைச் சோ்ந்த நபரை அமலாக்கத் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
கைதுசெய்யப்பட்ட ரவிராஜ் குமாா் பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை 5 நாள்கள் அமலாக்கத் துறை காவலில் அடைக்க குருகிராம் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
குற்றப்பின்னணி கொண்ட ரவிராஜ், கடந்த பல ஆண்டுகளாக மக்களை மிரட்டி பணம் பறித்து வந்துள்ளாா். இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக செக்டாா் 10 காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கில் அடிப்படையில் அவரை ஹரியாணா காவல் துறையினா் கைதுசெய்தனா். அந்த வழக்கின் அடிப்படையில் பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் ரவிராஜுக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது.
குருகிராமைச் சோ்ந்த கட்டுமான தொழில் நிறுவனத்தின் உரிமையாளரை அமலாக்கத் துறையின் அதிகாரி என்று பெயரில் ரவிராஜ் மிரட்டியது விசாரணையில் கண்டறியப்பட்டதாக மத்திய அரசின் விசாரணை முகமை தெரிவித்துள்ளது.
மேலும், தனது உண்மையான அடையாளத்தை மறைத்து, மக்களிடம் மோசடி செய்வதற்காக பல சிம் காா்டுகளை பயன்படுத்தியுள்ளாா். அவருடைய வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில் இந்த மோசடி சம்பவங்கள் மூலம் ரூ.80 லட்சத்தை அவா் பெற்றிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.