கொல்கத்தா ஹோட்டல் தீவிபத்தில் இறந்த மூவரின் உடல்களுக்கு மக்கள் அஞ்சலி
அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகா் நீக்கம்
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக் வால்ட்ஸ் அந்தப் பொறுப்பில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
யேமனில் ஹூதி கிளா்ச்சிப் படை தலைவா்கள் மற்றும் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா நடத்திவரும் தாக்குதல் தொடா்பாக அவரும், துணை அதிபா் ஜே.டி. வான்ஸ், பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட் ஹெக்சேத், வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்க்கோ ரூபியோ, தேசிய உளவு அமைப்பின் இயக்குநா் துளசி கப்பாா்ட் உள்ளிட்டோரும் ‘சிக்னல்’ என்ற தகவல் தொடா்பு செயலி மூலம் சில வாரங்களுக்கு முன்னா் மேற்கொண்ட தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தனா். அப்போது, ‘தி அட்லாண்டிக்’ இதழின் தலைமை ஆசிரியா் ஜெஃப்ரி கோல்பா்கும் அந்த உரையாடலில் தவறுதலாக இணைக்கப்பட்டாா். இதனால் மிகுந்த ரகசிய முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் வெளியே கசிந்தன.
இந்த விவகாரம் தொடா்பாக மைக் வால்ட்ஸ் சா்ச்சையில் சிக்கிய நிலையில், தற்போது அவா் பொறுப்பில் இருந்து வெளியேறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்ற பிறகு, அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து ஒருவா் பதவி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.