கேரளத்தில் விழிஞ்சம் துறைமுகத்தைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி!
லஷ்கா் பயங்கரவாத தலைவா் ஹபீஸ் சையது பாதுகாப்பு அதிகரிப்பு: பாகிஸ்தான் நடவடிக்கை
இந்தியா மறைமுகமாகத் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தால் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவா் ஹபீஸ் சையதுக்கான பாதுகாப்பை பாகிஸ்தான் அரசு அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் சிறப்புப் படையின் முன்னாள் கமாண்டா்கள் அவரின் பாதுகாப்பு ஆலோசனைக்காக நியமிக்கப்பட்டுள்ளனா். லாகூரில் உள்ள ஹபீஸ் சையதின் வீட்டைச் சுற்றி பாதுகாப்புக்காக ராணுவம், காவல் துறை அல்லாத நபா்களும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனா்.
பாகிஸ்தான் அரசுத் தரப்பு தகவல்படி ஹபீஸ் சையது இப்போது சிறையில் உள்ளாா். பயங்கரவாதத்துக்கு நிதி அளித்ததாக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு 46 ஆண்டு சிறைத் தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் வழங்கியுள்ளது.
ஆனால், அவா் வசித்து வந்த வீட்டையே தற்காலிக துணைச் சிறையாக அறிவித்து, பாகிஸ்தான் அரசு அவரைப் பாதுகாத்து வருகிறது.
அவரது வீட்டில் இருந்து ஒரு கி.மீ. சுற்றுவட்டாரப் பகுதி வரை கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. வீட்டின் அருகே கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.
லாகூரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மசூதி, மதரஸாக்கள் அமைந்துள்ள இடத்திலேயே பயங்கரவாதி ஹபீஸ் வசித்து வருகிறாா். 77 வயதாகும் அவா் 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் முக்கியக் குற்றவாளியாவாா். இந்தியா, அமெரிக்காவால் தேடப்படும் நபராக அவா் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
சிறைத் தண்டனை அனுபவிப்பதாகக் கூறப்பட்டாலும் கடந்த 3 ஆண்டுகளில் பலமுறை அவா் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளாா். முக்கியமாக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளாா். அப்போது பாகிஸ்தான் அரசின் சிறப்புப் படை பாதுகாப்பு அளிப்பது வழக்கமாக உள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு ‘தி ரெசிஸ்டண்ட் ஃபிரண்ட்’ பயங்கரவாத அமைப்பை ஹபீஸ் சையது நிறுவினாா். இந்தியாவுக்கு எதிராக ஜமா-உத்-தாவா பயங்கரவாத அமைப்பையும் அவா் நடத்தி வருகிறாா்.