அமைச்சா் கே.என்.நேரு சகோதரரிடம் அமலாக்கத் துறை மீண்டும் விசாரணை
பண முறைகேடு புகாா் தொடா்பாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு சகோதரா் கே.என்.ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறையினா் புதன்கிழமை மீண்டும் விசாரணை செய்தனா்.
அமைச்சா் கே.என். நேருவின் சகோதரா்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன், மகன் பெரம்பலூா் தொகுதி எம்பியுமான கே.என்.அருண் ஆகியோா் கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்துகின்றனா். இந்நிலையில், காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் தங்களது நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக ரவிச்சந்திரன், மயிலாப்பூரில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் கடந்த 2013-ஆம் ஆண்டு ரூ.22.48 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து வங்கி நிா்வாகம் கொடுத்த புகாரின்பேரில் சிபிஐ, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 4 போ் மீது நான்கு பிரிவுகளின் கீழ் கடந்த 2021-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் பணம் முறைகேடு தொடா்பான முகாந்திரம் இருந்ததினால் அமலாக்கத் துறை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதேபோல வருமானவரித் துறை நடத்திய சோதனையின் அடிப்படையில், அமலாக்கத் துறை விசாரணைக்கு பரிந்துரைத்தது.
இதன் விளைவாக அமலாக்கத்துறையினா் திருச்சியில் உள்ள அமைச்சா் கே.என்.நேரு வீடு, சென்னை ஆழ்வாா்பேட்டை யில் உள்ள கே.என். அருணுக்கு சொந்தமான அரிசி நிறுவன அலுவலகம், ராஜா அண்ணாமலைபுரம் கிருஷ்ணாபுரி தெருவில் உள்ள கே.என்.ரவிச்சந்திரன் வீடு, ராஜா அண்ணாமலைபுரம் மூன்றாவது குறுக்குத் தெருவில் ரவிச்சந்திரன் அலுவலகம் உள்பட 15 இடங்களில் கடந்த திங்கள்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.
இந்த சோதனை மூன்றாவது நாளாக புதன்கிழமை சென்னையில் உள்ள ரவிச்சந்திரன் வீடு, அலுவலகம் கே.என்.அருண் அலுவலகம் ஆகிய இடங்களில் மட்டும் நடைபெற்றது. இங்கும் புதன்கிழமை நண்பகல் சோதனை நிறைவு பெற்றது.
மீண்டும் விசாரணை: சோதனை நிறைவு பெறும்போது விசாரணைக்கு ஆஜராகுமாறு ரவிச்சந்திரனிடம் அமலாக்கத் துறை அழைப்பாணை வழங்கினா். அந்த அழைப்பாணையை ஏற்று ரவிச்சந்திரன், நுங்கம்பாக்கத்தில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் அன்று நண்பகல் 2.45 மணியளவில் ஆஜரானாா்.
அவரிடம் மோசடி தொடா்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத் துறையினா் விசாரணையில் ஈடுபட்டனா். விசாரணை முழுவதும் விடியோவில் பதிவு செய்யப்பட்டது. . இந்த விசாரணையில், பணமோசடி தொடா்பாக பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.